வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (13/11/2018)

கடைசி தொடர்பு:14:00 (13/11/2018)

`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு!' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி

நெய்யாற்றின்கரையில் கார் நிறுத்தியதில் ஏற்பட்ட தகராறில் எலக்ட்ரீசியனை கார் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட டி.எஸ்.பி. ஹரிகுமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்துக்கொண்ட டிஎஸ்பி ஹரிகுமார்


திருவனந்தபுரம் மாவட்டம், நெய்யாற்றின்கரை போலீஸ் டி.எஸ்.பி.யாக இருந்தவர் ஹரிகுமார். இவர் கடந்த 5-ம் தேதி தனது வீட்டிலிருந்து காரை வெளியே எடுக்க முயன்றிருக்கிறார். கார் எடுப்பதற்கு இடையூறாக நெய்யாற்றின்கரை காவுவிளையைச் சேர்ந்த சனல் (32) என்பவரது கார் நின்றிருக்கிறது. இதில் டி.எஸ்.பி. ஹரிகுமாருக்கும், சனலுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது டி.எஸ்.பி. தள்ளியதில் சாலையில் விழுந்த சனல், அப்பகுதியில் வேகமாக வந்த மற்றொரு கார் மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

சனல்

அங்கிருந்து தப்பிச் சென்ற டி.எஸ்.பி. ஹரிகுமார் சஸ்பெண்டு செய்யப்பட்டதுடன் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் டி.எஸ்.பி.க்கு சிம்கார்டு வாங்கிக்கொடுத்த கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பைச் சேர்ந்த லாட்ஜ் உரிமையாளர் சதீஷ் கைது செய்யப்பட்டார். மேலும், கொலை சம்பவம் நடந்த பிறகு டி.எஸ்.பி. தப்பிச் செல்வதற்காக கார் ஏற்பாடு செய்து கொடுத்த அனூப் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் டி.எஸ்.பி. ஹரிகுமாரை கைது செய்யவேண்டும் என இறந்துபோன சனலின் மனைவி விஜி இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கினார். இதற்கிடையில் வேகமாக வாகனம் வருவதை பார்த்த பின்புதான் டி.எஸ்.பி. ஹரிகுமார், சனலை சாலையில் பிடித்துத் தள்ளியதாக குற்றப்பிரிவு போலீஸார் கோர்ட்டில் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் டி.எஸ்.பி. ஹரிகுமார் திருவனந்தபுரம் கல்லம்பலத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. இதையறிந்த சனலின் மனைவி, ``இது கடவுள் வழங்கிய தீர்ப்பு" எனக் கூறி உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். டி.எஸ்.பி. தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.