வெளியிடப்பட்ட நேரம்: 15:14 (13/11/2018)

கடைசி தொடர்பு:15:14 (13/11/2018)

` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை!' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

ளம்பெண்ணை விருந்துக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், கும்பகோணத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கும்பகோணம் திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் புவனா (பெயர் மாற்றம்). இவர் அதே பகுதியில் உள்ள மீரா சில்க்ஸ் என்ற பட்டுப்புடவை கடையில் வேலை பார்த்து வந்தார். இதே கடையில் பணிபுரிந்த சின்னப்பா என்பவர், கடந்த 7-ம் தேதி தன்னுடைய வீட்டில் விருந்து நடப்பதாகக் கூறி, புவனாவை அழைத்துள்ளார். அதை நம்பி வீட்டுக்கு வந்தவருக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட புவனா, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்துக்கு காரணமான சின்னப்பாவை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், `புவனா கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்; போலீஸார் ஒருவரை மட்டும் கைது செய்திருக்கிறார்கள்.  கடையின் உரிமையாளர் கார்த்தி மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அவரது நண்பரையும் கைது செய்ய வேண்டும்' என கலெக்டர், எஸ்.பி ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளனர் அவரது உறவினர்கள். இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி இன்று திருபுவனத்தில் கடையடைப்பு போராட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட உள்ளது. 

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இளம்பெண்

புவனா உறவினர்களிடம் பேசினோம். `` குடும்பத்தின் வறுமையைப் போக்க துணிக்கடைக்கு வேலைக்குச் சென்று வந்தார். வன்கொடுமை சம்பவத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். புவனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், `அவரைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்' எனத் தெரிவித்தனர். இதுகுறித்து நாங்கள் புகார் கொடுத்த பிறகு, சின்னப்பா என்பவரை மட்டும் போலீஸார் கைது செய்துள்ளனர். இப்படியொரு கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும்" என்றார் கொதிப்போடு. 

இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி தமிழ்செல்வி, `` புவனாவின் அப்பா இறந்து 9 மாதம் தான் ஆகிறது. வறுமைக்காக வேலைக்குச் சென்ற பெண்ணை இப்படிக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் செயலில் புவனா வேலை பார்த்த கடையின் உரிமையாளர் கார்த்தி, அவரது நண்பர்கள், ஊழியர் சின்னப்பா ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இதில் சின்னப்பா மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். மற்ற குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். பாதிக்கப்பட்ட புவனாவுக்கு பத்து லட்ச ரூபாய் நிவாரணமும் அரசு வேலையும் வழங்க வேண்டும்" என்றார்.