வெளியிடப்பட்ட நேரம்: 18:08 (13/11/2018)

கடைசி தொடர்பு:16:31 (14/11/2018)

`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்!' - காடுவெட்டி குரு தாயார் கதறல்

``கட்சி கட்சின்னு சொல்லி என் மகன் குருவை அழித்துவிட்டீர்கள். இப்போது எதுக்குடா என் பேரனை கூப்பிடுகிறீர்கள். என் குடும்பத்தை அழித்த நீங்கள் நல்லா இருக்கமாட்டீங்கடா" என்று காடுவெட்டி குருவின் அம்மா பா.ம.க-வினரை சரமாரியாகத் திட்டிய வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவி வருகிறது. 

பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ-வும் வன்னியர் சங்கத்தலைவருமான காடுவெட்டி குரு, நுரையீரல் காற்றுப்பை திசு பாதிப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நான்கு மாத காலம் சிகிச்சைக்குப் பிறகு, காடுவெட்டி குரு காலமானார். இந்தநிலையில், குருவின் மனைவி லதா, ``சொத்துக்காக என் பிள்ளைகளை என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறார்கள். அவர்களோடு சேர்த்து வையுங்கள்" என்று  எழுதியதாகக் கடிதம் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து குருவின் மகன் கனலரசன் நேற்று தன் தாயை அவர்களின் உறவினர்களிடமிருந்து மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனப் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குருவின் குடும்பத்துக்குள் சலசலப்பு நிலவி வந்த சூழ்நிலையில் இன்று குருவின் அம்மா கல்யாணியம்மாள் பா.ம.க மாநிலத் துணைப் பொதுச் செயாலாளர் வைத்தியை கடுமையாகத் திட்டி தீர்த்திருக்கிறார். அந்த வீடியோவில், ``கட்சி கட்சின்னு சொல்லி என் மகன் குருவை அழிச்சிட்டீங்கள். இப்போது எதுக்குடா என் பேரனை கூப்பிடுகிறீர்கள். என்னோட பிள்ளையால்தான் நீங்கள் எல்லோரும் கட்சிக்குள்ளே வந்தீங்க. இப்போ நீங்கள் எல்லோரும் மூணு வீடு, நாலு வீடுனு கட்டி சந்தோஷமா காசு பணத்தோடு வாழுறீங்க. ஆனா, நாங்க மட்டும் கடனில் தத்தளிக்கிறோம். எங்க குடும்பத்துக்கு உதவி செய்யுறவுங்கள ஏண்டா தடுக்குறீங்க. உங்களுக்கு நாங்க என்னடா பாவம் செய்தோம். நீ துரோகம் பண்ணிட்ட. உருப்படவே மாட்டாய். பிள்ளையோட பேரை பயன்படுத்தி கோடி கோடியா கொள்ளையடிச்சவன்டா நீ. என்னோட மகன் இறந்து ஒரு வருடம் ஆகுறதுக்குள்ள உங்களை எல்லாம் பலி தீர்ப்பாண்டா. என் குடும்பத்தை அழித்த நீங்கள் நல்லா இருக்க மாட்டீங்கடான்னு" தலையில் அடித்துக்கொண்டு சாபமிட்டார். இந்த வீடியோ தற்போது பா.ம.க தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.