வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (14/11/2018)

கடைசி தொடர்பு:11:32 (16/11/2018)

``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது?!" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு

தீபாவளி விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்த 12-ம் வகுப்பு மாணவியை, இரண்டு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததில், அந்தப் பெண் இறந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அந்த மாணவியின் வீட்டுக்கு `பெண்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு' சார்பாக ஆறுதல் கூறச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூகச் செயற்பாட்டாளர் வளர்மதி உட்பட நான்கு பேரை மட்டும் காவல் நிலையத்திலிருந்து இன்னமும் விடுவிக்காமல் மற்றவர்களைக் காவல் துறையினர் விடுவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்துள்ள சிட்லிங் மலை கிராமத்திற்குச் சென்றவர்களுள் திருநங்கை கிரேஸ் பானுவும் ஒருவர். நேற்று களத்தில் நடந்த விஷயங்கள் குறித்து அவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

"`பெண்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு' சார்பாகப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 14 தோழர்கள் போயிருந்தோம். ஆண்கள், பெண்கள், திருநங்கைகள்னு எல்லோரும்சேர்ந்து கொல்லப்பட்ட மாணவியின் வீட்டுக்குப் போகலாம்னு முடிவு பண்ணோம். நாங்க அவங்க வீட்டுக்குப் போய்ட்டு இருக்கும்போதுதான் மாணவியின் உடலை நல்லடக்கம் செஞ்சிட்டாங்கன்னு கேள்விப்பட்டோம். இருந்தாலும் பிரவாயில்ல, அவங்க அம்மாவைப் பார்த்து ஆறுதல் சொல்லிட்டு வரலாம்னு போனோம்.

எங்களைப் பார்த்ததும், அவங்க அம்மா கட்டிப்பிடிச்சு கதறி அழ ஆரம்பிச்சிட்டாங்க. 'பாப்பா... தீபாவளி லீவுக்காக வந்துச்சும்மா, எப்பவும் பாத்ரூம் போக ஓடைக்குப் பாதுகாப்புக்கு ஆட்களைக் கூட்டிட்டுத்தான் போவாள். எங்க ஊருல எல்லோருமே துணைக்கு ஆட்களோடத்தான் ஓடைக்குப் போவாங்க. திங்கள்கிழமை நான் ஆடு மேய்க்கப் போயிட்டேன். என் வீட்டுக்காரர் காட்டு வேலைக்குப் போயிட்டாரு. புள்ளை பாத்ரூம் போக தனியா ஓடைக்குப் போயிருக்கு. அந்தச் சமயத்துல என் புள்ளையை நாசம் பண்ணிட்டானுங்கம்மா'னு அவங்க அம்மா கதறினப்ப, எங்களால ஆறுதல் சொல்லவே முடியல.

அந்தப் பொண்ணு தனியா ஓடைக்கு வர்றதைப் பார்த்துட்டு ரமேஷ், சதீஷ் ரெண்டு பேரும் அந்தப் பொண்ணு கழுத்துல போட்டுறந்த சால்வையை எடுத்து வாய்க்குள்ள திணிச்சு, அவ கை ரெண்டையும் சாரத்தை வைச்சுக் கட்டி, பாலியல் வன்புணர்வு பண்ணியிருந்திருக்காங்க. அப்ப, அந்த வழியா வந்த ஒருத்தர் அந்தப் பசங்களைப் பார்த்ததும் இரண்டு பேரும் தப்பிச்சு ஓடினானுங்க. மூச்சுத் திணறி கிடந்தப் பொண்ணை மீட்டு வீட்டுக்குப் போகச் சொல்லிட்டு, அந்தப் பசங்களைப் பிடிக்க அவர் ஓடியிருந்துருக்காரு. அந்தப் பொண்ணு வீட்டுக்கு வந்து அவங்க அத்தைங்ககிட்ட சொல்லி அழுதுருக்கு. அந்தப் பொண்ணோட அம்மா வீட்டுக்கு வந்ததும் எல்லோரும் சேர்ந்து போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கப் போயிருந்துருக்காங்க.

தர்மபுரி மாணவி

முதல்ல கொட்டாப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிருந்துருக்காங்க. அங்கே இவங்க புகார் கொடுத்ததும், `உங்க பொண்ணு நேர்ல வந்து சொன்னாத்தான் வழக்கு பதிவு பண்ண முடியும்'னு சொல்லியிருந்துருக்காங்க. அதுக்கு இந்தப் பொண்ணோட அம்மா, `வீட்டுல தாங்க பொண்ணு இருக்கு. நம்பலைன்னா வீட்டுக்கு வாங்க'னு சொல்லி அழுதுருக்காங்க. அவங்க கூட ஒரு பெண் போலீஸை அனுப்பி வைச்சிருந்துருக்காங்க. அந்த போலீஸ், வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் விசாரிச்சிட்டு, உங்க பொண்ணு மேல ஒரு சொட்டுத் தண்ணீ கூடப்படக் கூடாது. ஆஸ்பத்திரிக்கெல்லாம் கூட்டிட்டுப் போக வேண்டாம் அப்போதான் காலையில கம்ப்ளைன்ட் எடுத்துக்க முடியும்னு சொல்லியிருந்துருக்காங்க. இவங்களும் அதை நம்பி அந்தப் பொண்ணுக்கு முதலுதவி சிகிச்சை கூடக் கொடுக்கலை. அந்தப் பொண்ணுக்கு பீரியட்ஸ் டைம்ங்குறதுனால ரொம்ப ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கு.

மறுநாள் காலையில அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வழக்கு கொடுக்கப் போயிருந்துருக்காங்க. அதை விசாரிச்சிட்டு கொட்டாப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், அரூர் ஸ்டேஷனுக்குப் போகச் சொல்லியிருந்துருக்காங்க. அவங்களைக் கூட்டிட்டுப் போகுறதுக்கு பெட்ரோல் காசுன்னு இரண்டாயிரம் ரூபாயைக் கேட்ருக்காங்க. அந்தப் பொண்ணோட அம்மாவும் அவங்க கேட்ட காசைக் கொடுத்துருக்காங்க. அரூர் போய்ட்டு இருக்கும்போது ஃபோன் வந்துருக்கு. நேரா தர்மபுரி கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லியிருக்காங்க. மறுபடி தர்மபுரி போக இரண்டாயிரம் கேட்ருக்காங்க. அதையும் கொடுத்திருக்காங்க. தர்மபுரி போனதும் நேரா போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போகாம ஹோம்க்குக் கூட்டிட்டுப் போயி சிகிச்சை ஆரம்பிச்சிருக்காங்க. அங்கேயும் ஒழுங்கா சிகிச்சை அளிக்கலையாம். இரண்டு நாள் முறையான சிகிச்சை கொடுக்காம அலைக்கழிச்சதுனால சின்னப் பொண்ணோட உசுரு போயிருக்கு. இதை அவங்க அம்மா சொல்லும்போது அந்த வலிக்கு என்ன மருந்து கொடுக்கன்னே தெரியலை.

அவங்கக்கிட்ட பேசிட்டு இருக்கும்போது திடீர்னு ஆளுங்கட்சிக்காரங்க நாற்பது பேர் வந்தாங்க. மினிஸ்டர் அன்பழகன் இந்தப் பொண்ணோட வீட்டைப் பார்வையிட வர்றாரு. நீங்க போங்கன்னு எங்களை விரட்டுனாங்க. அவரும் மனுஷன்... நாங்களும் மனுஷங்க... நாங்க ஏன் போகணும்னு கேட்டோம். பேசிட்டே இருக்கும்போது எங்க ஃபோனைத் தட்டி விட்டு, வளர்மதி தோழரைத் தள்ளி விட்டாங்க. அதுக்கப்புறம் எங்களுக்குள்ள வாக்குவாதம் நடந்துச்சு. சரின்னு, நாங்களும் அந்த மாணவியை பலாத்காரம் செஞ்ச இடத்துக்குப் பார்வையிடப் போனோம். அங்கே அந்தப் பொண்ணோட உள்ளாடை, வளையல் எல்லாமே அப்படியே கிடந்துச்சு. வழக்கு பதிவு பண்ணியிருந்தா இதெல்லாமே ஆதாரம்தானே! அதை கண்டுக்காம இருக்கிறதுக்கு என்ன காரணம்?! அந்த இடத்தைப் பார்த்துட்டு திரும்பி வந்தோம். நாங்க திரும்பி வந்தப்போ மினிஸ்டர் அந்தப் பொண்ணோட வீட்டுக்கு வந்துட்டுப் போயிட்டார். 

அவங்க வீட்டுக்குப் போனோம். திடீர்னு அங்கே நிறைய போலீஸ்காரங்க வந்துட்டாங்க. எங்க எல்லோரையும் வேன்ல ஏத்தி எங்களைச் சுத்தி கிட்டத்தட்ட 200 போலீஸ் வந்தாங்க. போய்ட்டு இருக்கும்போது திடீர்னு பாத்ரூம் வந்துடுச்சு. பெண்கள் கூட யூரீனை அடக்கிக்கலாம். நாங்க திருநங்கை எங்களால் அடக்க முடியாதுன்னு தோழர்கள்கிட்ட சொல்லி வேனை நிறுத்தி இறங்கினேன். வேகமா அங்கே வந்த போலீஸ் அதிகாரி ஒருத்தர், அதெல்லாம் எங்கேயும் போக முடியாது. ஊரைத் தாண்டினதும் எங்கே போகணுமோ போய்க்கோங்கன்னு சொன்னார். எவ்வளவு சொல்லியும் அவர் காது கொடுத்துக்கூட கேட்கலை. அரூர் பஸ் ஸ்டாண்ட்ல எங்களை விடுறதா சொன்னாங்க. ஆனா, நேரா எங்களை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வந்துட்டாங்க. நாங்க என்ன தப்பு பண்ணோம்னு எங்களுக்கும், போலீஸ்காரங்களுக்கும் இடையில வாக்குவாதம் நடந்துச்சு. எங்க கூட வக்கீல்களும் வந்திருந்தாங்க. அவங்களும் எங்களுக்காக வாதாடுனாங்க. கடைசியா இரவு நேரத்துல எங்களை மட்டும் விட்டாங்க. எங்க கூட வந்த தோழர்கள் வளர்மதி, மகாலட்சுமி, வேதியப்பன், ராமகிருஷ்ணன் போன்றவர்களைக் கைது பண்ணியிருக்காங்க. பொதுமக்களுக்கு இடையூறு கொடுத்தாங்கன்னு வழக்கு பதிவு செஞ்சிருக்காங்க. 

உண்மையை வெளிச்சம் போட்டு உலகுக்குச் சொல்லிடுவாங்களோங்குற பயத்துலதான் இப்படிக் கைது நடவடிக்கை எடுக்குறாங்க. ஆறுதல் சொல்லப்போனவங்களைக் கைது பண்ணி, இனிமே யாராச்சும் பாதிக்கப்பட்டவங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்தீங்கன்னா உங்களையும் கைது பண்ணுவோம்னு மிரட்டுறாங்களா?! எத்தனை பேரை கைது செஞ்சாலும் உண்மையை யாராலும் மறைக்க முடியாது" என்று உறுதியாகச் சொல்கிறார் கிரேஸ் பானு.

உண்மை வெல்லட்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்