`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்பு உணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி! | Dengue awareness in karur

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (15/11/2018)

கடைசி தொடர்பு:07:29 (15/11/2018)

`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்பு உணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி!

``பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் டெங்குவை எளிதில் ஒழிக்கலாம். எனவே, பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்து கொசுக்கள் மூலம் உருவாகும் நோய்களை தடுக்க ஒத்துழைக்க வேண்டும்" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் அறிவுரை வழங்கினார்.

கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியம் மணவாடி ஊராட்சி மருதம்பட்டி, மணவாடி பகுதிகளில் டெங்கு தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஎஸ் கொசுப் புழுக்கள் இருப்பதைக் கண்டறிந்து வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார். மேலும், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ள நீர் சேகரிப்பு தொட்டியில் கொசு புழுக்கள் உள்ளதைக் கண்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், அந்த வீட்டின் குழந்தைகளை அழைத்து தொட்டியின் மீது தூக்கி ஏற்றி கொசுப் புழுக்கள் உள்ளதை சுட்டிக்காட்டி, 'இதுபோன்று கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதால்தான் டெங்கு நோய் பரவி வருகின்றது. எனவே, உங்கள் பகுதிகளில் உள்ளவர்களிடம் இதை மாணவர்களாகிய நீங்கள் எடுத்துக்கூறி விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்று கேட்டுக்கொண்டு விழிப்பு உணர்வு துண்டுப் பிரசுரங்களை மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார். 


அதன்பிறகு பேசிய ஆட்சியர், ``பொதுமக்கள் தங்களது குடியிருப்பில் சேமித்து வைத்திருக்கும் நீரை நன்றாக துணிகள் மற்றும் மூடிகளை கொண்டு மூடிவைக்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமாகி அதுநமக்கு நோயை உருவாக்குவதுடன் அண்டை அயலாருக்கும் நோயை பரப்புகிறது. டெங்கு தடுப்பு பணியாளர்கள் அல்லது தூய்மைக் காவலர்கள் வீடு வீடாகச் சென்று ஏடிஎஸ் கொசுப் புழுக்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் டெங்குவை எளிதில் ஒழித்து விடலாம். எனவே, பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள முன்வர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
 

 

மணவாடி கிராமத்தில் உள்ள பெரும்பான்மையான வீடுகளில் தண்ணீர் முறையாக பராமரிக்காமல் லார்வா உற்பத்தியாகும் வகையில் இருந்ததால்,'அங்குள்ள பொதுமக்களுக்கு டெங்கு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை 18.11.2018 அன்று பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு குறும்படமும், சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் விழிப்பு உணர்வு கருத்துகளும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.