வெளியிடப்பட்ட நேரம்: 13:23 (15/11/2018)

கடைசி தொடர்பு:13:23 (15/11/2018)

`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்

மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் சென்ற காரும் பேருந்தும் மோதிய விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். 

5 பேர் பலியான விபத்து

சென்னையில் திருமண நிகழ்ச்சி முடிந்தது கடலூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்குக் கடற்கரைச் சாலையில் இன்று அதிகாலை மோதியது. இதில் கார், அப்பளம்போல நெறுங்கியது. இதனால் காரில் இருந்தவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அவர்களின் சடலங்களும் காருக்குள் சிக்கிக்கொண்டது. இதனால் அவர்களை பொதுமக்களால் மீட்க முடியவில்லை. இதையடுத்து, மாமல்லபுரம் போலீஸாருக்கும் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் காருக்குள் சிக்கிய 5 பேரின் சடலத்தை மீட்க நீண்ட நேரம் போராடினர். வெல்டிங் உதவியோடுதான் 5 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. மேலும் விபத்தில் காயமடைந்த 16 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இறந்தவர்களில் மூன்று பேரின் விவரங்கள் மட்டும் கிடைத்துள்ளன.

 5 பேர் பலியான கார்விபத்து

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திக் (23). கல்லூரி மாணவர், அவர், தன்னுடைய பள்ளி நண்பர்களான புதுக்கோட்டை மாவட்டம் அதிராம்பட்டனத்தைச் சேர்ந்த முகமது தகீம் அப்சுரா (22), பெரம்பூரைச் சேர்ந்த சாய்சதீஷ் (22) மற்றும் 2 பேருடன் நேற்று காலை காரில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்குச் சென்றுள்ளனர். புதுச்சேரியில் உள்ள நண்பரைப் பார்த்துவிட்டு மீண்டும் காரில் சென்னை திரும்பினர். காரை கார்த்திக் ஓட்டியுள்ளார். அப்போது சென்னையில் திருமணத்தை முடித்துவிட்டு கடலூர் நோக்கி தனியார் பேருந்தில் 50 பேர் சென்றுள்ளனர்.

திருமண கோஷ்டியினர் சென்ற தனியார் பஸ், முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்திச் செல்ல முயன்றுள்ளது. அப்போது எதிரில் வந்த காரை தனியார் பேருந்து டிரைவர் கவனிக்கவில்லை. இதனால் காரை ஒட்டிய டிரைவர் அதிர்ச்சியடைந்தார். கண் இமைக்கும் நொடிப்பொழுதில் காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதின. விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல நொறுங்கியது. காருக்குள் பயணித்த கார்த்திக், முகமது தகீம், சாய்சதீஷ் உட்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். 5 பேரின் சடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். பலியான இரண்டு பேர் குறித்த தகவல் தெரியவில்லை. தொடர்ந்து விசாரித்துவருகிறோம்" என்றனர். 

 5 பேர் பலியான கார்விபத்து

விபத்து நடந்த இடத்தில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் மீட்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் சிரமமடைந்தனர். இருப்பினும் அவர்கள் துரிதமாக செயல்பட்டு விபத்தில் காயமடைந்தவர்களை முதலில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு இறந்தவர்களின் சடலங்களை ஒவ்வொன்றாக மீட்டனர். காரை கார்த்திக் ஓட்டியதாக கூறப்பட்டாலும் அவர்தான் காரை ஓட்டினார் என்பதை போலீஸாரால் உறுதியாகச் சொல்லவில்லை. ஏனெனில் காரின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது. காருக்குள் இருந்தவர்களின் சடலங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இறந்தவர்களின் உறவினர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிணவறை முன் கதறி அழுத காட்சி கல்நெஞ்சை உருக்குவதாக அமைந்தது. கிழக்குக் கடற்கரைச் சாலையில் காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.