தம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு! | Tiruchirappalli People got angry against thambidurai

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (16/11/2018)

கடைசி தொடர்பு:07:44 (16/11/2018)

தம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு!

``போன தேர்தல்ல மணல் கொள்ளையை தடுப்பதாக வாக்குறுதி தந்தீங்க,, ஆனால் அதை நீங்க மறந்ததால், எங்கள் ஊர் குளத்தையே கபளீகரம் பண்ணிவிட்டாங்க “ என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை பொதுமக்கள் முற்றுகையிட்டதாலும், கிராம நிர்வாக அலுவலரின் அலுவலக பூட்டை கலெக்டர் உடைக்கச் சொன்னதாலும் பரபரப்பு நிலவியது.

 தம்பிதுரை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள மினிக்கியூர், மதுக்காரன்பட்டி, குரும்பப்பட்டி, பிராம்பட்டி, கைகாட்டி போன்ற 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் தண்டபாணி, மருங்காபுரி வட்டாட்சியர் கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதலெட்சுமி, சரவணன், பொன்னம்பட்டி செயல் அலுவலர் சாகுல்ஹமீது மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

முதன்முதலாக மினி கிளியூரில் துவங்கிய மக்கள் குறைதீர்ப்புக் கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரையை, அந்த ஊரின் தி.மு.க பிரமுகர் செந்தில்குமார் என்பவர் தலைமையில் திரண்டிருந்த அப்பகுதிமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது பொதுமக்கள், இப்பகுதியில் உள்ள டோனிக்குளத்தில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டினர். அதைக்கேட்டு கடுப்பான தம்பிதுரை, ``நான்! மணல் அள்ளவில்லையே” எனப் பதிலளிக்கவே,  கடுப்பான அப்பகுதி மக்கள், ``நீங்கள் தேர்தல் பிரசாரத்தில் மணல் கொள்ளையைத் தடுப்பதாக வாக்களித்தீர்கள். ஆனால், இன்னும் அதை நிறைவேற்றவில்லை. இன்னும் எங்கள் ஊரில் ராத்திரி பகலாக மணல் அள்ளப்படுகிறது. அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை” எனக் கூறி  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கிராம நிரவாக அலுவலர்

 

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி  பொதுமக்களிடம் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளித்தார். அதன்பிறகு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மினி கிளியூரில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைக் பெற்றார். அதையடுத்து  விசாரித்ததில் அந்த ஊரின் கிராம நிர்வாக அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கிராம நிர்வாக அதிகாரி கிராம அலுவலகத்தை வேறு இடத்தில் நடத்தி வருவதைக் கேட்டு கோபமடைந்த மாவட்ட கலெக்டர் ராசாமணி, இன்று மாலைக்குள் கிராம நிர்வாக அலுவலகம் உரிய இடத்தில் இயங்காவிட்டால்  கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும், கிராம நிர்வாக அலுவலர் பூட்டியிருக்கும் பூட்டை உடைக்கவும் உத்தரவிட்டார்.

அவர் உத்தரவின்பேரில் மருங்காபுரி வட்டாட்சியர் கமலக்கண்ணன் மற்றும்  கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பூட்டை உடைத்து கிராம நிர்வாக அலுவலகத்தைத் திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தனர்.  பல கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மக்களிடம் கோரிக்கை மனுக்களைக் பெற்றார். அவரிடம் பொதுமக்கள், குடிநீர்வசதி, சாலை வசதி, காவிரி குடிநீர், பகுதி நேர நியாயவிலை அங்காடி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, உடற்பயிற்சிக் கூடம், மயான சாலை, எரிமேடை போன்ற சுமார் 1000-த்துக்கும் மேற்பட்ட மனுக்களைக்  கொடுத்தனர். அந்த மனுக்களைக் பெற்றுக்கொண்டு அனைத்தும் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என தம்பிதுரை உறுதியளித்தார்.     

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையைப் பொதுமக்கள் முற்றுகையிட்டதும், அதையடுத்து வட்டாட்சியர் முன்னிலையில்  பூட்டப்பட்டிருந்த கிராம நிர்வாக அலுவலகத்தை கடப்பாரை கொண்டு பூட்டை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.