வெளியிடப்பட்ட நேரம்: 13:56 (16/11/2018)

கடைசி தொடர்பு:19:07 (16/11/2018)

``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்!" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை

``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்!

ல்லூரி விரிவுரையாளர் வேலையிலிருந்து விலகிய பின், வேலை பார்த்த கல்லூரியில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழை திருப்பித்தராததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம், பொறியியல் கல்லூரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மெக்கானிக் பாடப்பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் வசந்த வாணன். இவர், ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி செம்பரம்பாக்கம் ஸ்ரீ சாஸ்தா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்தபோது அவரது அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களையும், கல்லூரி நிர்வாகம் வாங்கி வைத்துக்கொண்டது.

மரணம்

கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னைக் குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய அங்கமாக உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் வசந்த வாணனுக்கு வேலை கிடைத்தது. இதனால், தனது அசல் சான்றிதழ்களை திருப்பித்தரும்படி கேட்டிருக்கிறார். ஆனால், கல்லூரி நிர்வாகம் திருப்பித்தராமல் இழுத்தடித்திருக்கிறது. சான்றிதழ் விவகாரம்இதுதொடர்பாக வசந்த வாணன், சாஸ்தா கல்லூரி முதல்வரிடம் பேசி இருக்கிறார். 

``கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாது. ஒரு நாள் விடுமுறை எடுத்து, கல்லூரி நிர்வாகியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுச் சான்றிதழை பெற்றுச் செல்லுங்கள்”  என, கல்லூரி முதல்வர் தெரிவித்திருக்கிறார். மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான வசந்த வாணன், நாசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். ஆனால், காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிகுந்த வேதனைக்கு உள்ளான வசந்த வாணன் தற்கொலை செய்துகொண்டார். தகவல் கிடைத்தவுடன், காவல்துறையின் அறிவுறுத்தலின் பெயரில் வசந்த வாணனின் சகோதரரிடம் சான்றிதழ்களை ஒப்படைத்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். 

வசந்த வாணனின் உறவினர் தீனதயாளனிடம் பேசினோம். ``வசந்த வாணனின் சொந்த ஊர் கடலூர். அப்பா, அம்மா இரண்டு பேருமே அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள். தாம்பரம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ, அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ படித்தார். எம்.இ படிப்பில் கோல்டு மெடல் வாங்கியுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளாகத் தனியார் கல்லூரியில் வேலை பார்த்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் சாஸ்தா கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தார். அந்தக் கல்லூரியில் வேலைக்குச் சேரும்போதே, எம்.ஐ.டி-யில் விண்ணப்பித்திருப்பதாகவும் அங்கு வாய்ப்பு கிடைத்தால் சான்றிதழைத் தர வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்திருந்தார். 

ஆகஸ்ட் மாத இறுதியில் எம்.ஐ.டி கல்லூரியில் வேலையும் கிடைத்துவிட்டது. அதில் சேர்ந்தபின் கல்லூரி நிர்வாகத்தை அணுகி அசல் சான்றிதழைத் திரும்பித் தரும்படி கேட்டார். ஆனால், கல்வி நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களாக இழுத்தடித்தது. இதுகுறித்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனால், வசந்த வாணனைக் கல்லூரி நிர்வாகத்தினர் ஆள் வைத்து அடித்தனர்.

மூன்று லட்ச ரூபாய் தந்தால் மட்டுமே சான்றிதழ் தர முடியும் என்றும், ஆள் வைத்து அடித்த விவகாரத்தை வெளியில் சொன்னால் குடும்பத்தை அழித்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் மிகுகவும் பயந்த நிலையிலேயே இருந்தார். `என்னைப்போல் வேறுயாரும் சான்றிதழ் பிரச்னையால் பாதிக்கக் கூடாது. நான் இறந்த பிறகாவது சான்றிதழ்களை  என்னுடைய சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்' என்று செய்தி அனுப்பிவிட்டு இறந்து விட்டார்" எனக் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டார். 

சான்றிதழ் விவகாரம் தற்கொலை

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (AICTE) அதிகாரிகளிடம் பேசினோம். ``பொறியியல் கல்லூரிகளில் அசல் சான்றிதழை வாங்கி வைத்துக்கொள்ளக் கூடாது என்று அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன. கல்லூரிகளில் சான்றிதழ்கள் வாங்கி வைத்துக்கொண்ட கல்லூரிகள் குறித்து புகார் தெரிவித்தால் அந்தக் கல்லூரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வசந்த வாணன் எங்களை அணுகி இருந்தால், கல்லூரியில் பேசி சான்றிதழ் பெற்றுத்தர ஏற்பாடு செய்திருப்போம். கல்லூரியில் சான்றிதழ் திரும்பப் பெற முடியவில்லை என்று தவறான முடிவு எடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்றனர். 

அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் குமார், ``சான்றிதழ் திருப்பிக்கொடுக்காத கல்லூரியின் மீது புகார்கள் வருகின்றன. சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு, சான்றிதழைப் பெற்றுத் தருகிறோம். வசந்த வாணன் விவகாரம் குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார். 

வசந்த வாணனுடன் பணியாற்றிய விரிவுரையாளர்களுடன் பேசினோம். ``வசந்த வாணன் கல்லூரியில் சேர்ந்து 25 நாள்களுக்குக் குறைவாகவே பணியாற்றியிருந்தாலும், நல்ல முறையில் வகுப்பு எடுத்து மாணவர்களிடம் நற்பெயரைப் பெற்றுள்ளார். தன்னுடைய சான்றிதழை திரும்பப் பெற பலமுறை கல்லூரி நிர்வாகியைச் சந்தித்துப் பேச முயற்சி செய்தார். அவரிடம் இரண்டு மூன்று மாதங்கள் அலையவைத்து சான்றிதழைக் கொடுத்துவிடுவார்கள் என்று ஆறுதல் சொன்னோம். ஆனால், வசந்த வாணன் தவறான முடிவெடுத்துவிட்டார். தற்போது காவல்துறையின் உதவியுடன் தற்கொலை வழக்கை வேறுவகையில் மாற்றி எழுத முயல்கிறது கல்லூரி நிர்வாகம். கல்லூரி நிர்வாகம் எங்களுடைய பத்தாம் வகுப்பு சான்றிதழ் முதல் முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ் வரை அனைத்தையும் வாங்கி வைத்துள்ளது. நாங்களும் மிகுந்த பயத்துடனும், மன அழுத்தத்திலும்தான் இருக்கிறோம்” என்றனர். 

அகில இந்திய சுயநிதி கல்லூரிப் பணியாளர்கள் சங்கத்தைச் சார்ந்த கார்த்திக், ``தனியார் கல்லூரியிலும், பள்ளியிலும் ஆசிரியரின் சான்றிதழை பிடுங்கக் கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால், எந்தச் சட்டங்களையும் தனியார் கல்லூரிகள் மதிப்பது இல்லை. அவற்றைப் பல்கலைக்கழகமோ, AICTE, UGC போன்ற நாடு தழுவிய அமைப்புகளோ கண்டுகொள்வது கிடையாது. இதனால் தனியார் கல்லூரிகள் ஆசிரியர்களை அடிமைபோல நடத்துகின்றன. இதனால் பல வசந்த வாணன்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். உடனடியாக சான்றிதழ்களைப் பிடுங்கும் கல்லூரிகளை அங்கீகாரம் உடனடியாக ரத்துசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 

சான்றிதழ் விவகாரம்தனியார் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் செல்வகுமார், ``ஒருவரின் கல்விச் சான்றிதழ்கள் என்பது அவரின் சொத்து போன்றது. கல்லூரிகள் வேலைக்காகச் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொள்வது அவரது சொத்தைப் பிடுங்கி வைத்துக் கொள்வது அல்லது அடமானம் வைத்து வாழ்வதைப் போன்றது. வேலைக்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போதே நேர்முகத்தேர்வில் அவரது சான்றிதழ்களை சரிபார்த்து திறன்களை சோதித்த பின்தான் பணியில் அமர்த்துகிறார்கள். சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தபின் ஒருவார காலத்துக்குள் அதை உரியவரிடம் ஒப்படைக்கவேண்டும். 

சில நிறுவனங்களில் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து கணிப்பொறியில் சேமித்து வைத்துக் கொள்கிறார்கள் . இதை எல்லாத் தனியார் கல்வி நிறுவனங்களும் பின்பற்றலாம். அரசு இதைப் பரிசீலித்து, தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களிலும் வேலையில் சேர சான்றிதழ்களை வாங்கி வைப்பதைத் தடை செய்ய வேண்டும். வாங்கி வைத்துள்ள சான்றிதழ்களை திருப்பிக் கொடுக்க சட்ட வழியில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வசந்த வாணன் போன்றவர்களின் உயிரிழப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார். 

அண்ணா பல்கலைக்கழகமும், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?!


டிரெண்டிங் @ விகடன்