வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (16/11/2018)

கடைசி தொடர்பு:20:28 (16/11/2018)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான டெய்லர் ரவி

சென்னை மயிலாப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரை போலீஸார் கைது செய்தனர். அவரின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ரவி. டெய்லர். இவரின் மனைவி, மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த ரவி, அந்தப் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றுள்ளார். அதை அந்தப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பார்த்துள்ளார். உடனே சிறுமியின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்த கல்லூரி மாணவன் அங்கு சென்றார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டது. உடனே கதவைத் திறக்கும்படி வெளியிலிருந்து பொதுமக்கள் சத்தமிட்டனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். பிறகு, ரவியிடம் சிக்கிய சிறுமியை மீட்டனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரவியைத் தாக்கினர். இதற்கிடையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கிருந்து மயிலாப்பூர் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. மயிலாப்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடமிருந்து ரவியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

சிறுமியின் பாட்டி வசந்தா, மயிலாப்பூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் ரவி, தன்னுடைய பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கமலாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் சோபியா ஆகியோர் ரவியிடம் விசாரித்தனர். அவர் வைத்திருந்த செல்போனை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்தன. இதையடுத்து ரவி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ரவியின் மகன், பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். அவருக்குத் திருமணமாகி குழந்தை உள்ளது. அந்தக் குழந்தையைக் கவனிக்க ரவியின் மனைவி மகனின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். தனிமையில் இருந்த ரவி, சம்பவத்தன்று சிறுமியை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றுள்ளார். அங்கு அவரிடம் தன்னுடைய செல்போனில் இருந்த ஆபாச வீடியோவை காண்பித்துள்ளார். மேலும், சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார். அதற்குள் பொதுமக்கள் வந்து சிறுமியை மீட்டுவிட்டனர். ரவியிடம் விசாரித்தபோது முதலில் குற்றத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், அவரின் செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்களும் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும்தான் ரவியை கைது செய்துள்ளோம்" என்றனர். 

 சிறுமியிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் சொன்ன தகவலைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். ``சிறுமியின் அப்பா இறந்துவிட்டார். அவரின் அம்மா, வீட்டு வேலை செய்து சிறுமியைப் படிக்கவைத்து வருகிறார். பாட்டியின் வீட்டில்தான் சிறுமி, அவரின் அம்மா ஆகியோர் வசித்து வருகின்றனர். ரவியின் வீட்டுக்கு எதிரில்தான் சிறுமி குடியிருக்கிறார். இதனால் அவர் குறித்த விவரங்கள் ரவிக்குத் தெரியும். கல்லூரி மாணவர் ஒருவர் கொடுத்த தகவலால் சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார் என்கின்றனர் போலீஸார்.

சிறுமியிடம் ரவி தவறாக நடக்கவில்லை என்றும் தேவையில்லாமல் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ரவியின் தரப்பினர் தெரிவித்தனர். ரவியின் செல்போனில் ஆபாச படங்கள் இருந்ததா என்ற கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. தற்போது, ரவியின் செல்போனை போலீஸார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.