வெளியிடப்பட்ட நேரம்: 21:27 (18/11/2018)

கடைசி தொடர்பு:22:01 (18/11/2018)

நிவாரணம் சரிவர வந்து சேரவில்லை - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காரை அடித்து நொறுக்கிய மக்கள்! 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் "கஜா" புயல் தாக்கிய பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் சரிவர வந்து சேரவில்லை என்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் நிவாரணப் பொருட்களுடன் அங்கு வந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் காரை அடித்து நொறுக்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

ஓ.எஸ்.மணியன் கார்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட காமேஸ்வரம், விழிந்தமாவடி , வேட்டைக்காரனிருப்பு, புதுப்பள்ளி, நாகமுடையான் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, விழுந்தமாவடி கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ. எஸ்.மணியன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விழுந்தமாவடி கிராம பொதுமக்கள் அமைச்சர் வந்த காரை அடித்து நொறுக்கியதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க-வினரும், அமைச்சரின் பாதுகாவலர்களும் அமைச்சர் ஓ.எஸ்.மணியனை பத்திரமாக மீட்டு, வேறு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாகை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், விழுந்தமாவடி கிராம பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஓ எஸ் மணியன் கார்

மேலும், நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்ல வழி விடுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் , பொதுமக்கள் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.