வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (19/11/2018)

கடைசி தொடர்பு:05:59 (19/11/2018)

‘கஜாவின் தீவிரத்தை முன்னரே கணித்த அரசுப்பள்ளி ஆசிரியர்’- தமிழ்நாட்டின் இன்னொரு வெதர்மேன்

கஜா புயல் எங்கே கரையை கடக்கும், அது எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இரண்டு வாரங்களுக்கு முன்பே கணித்து கூறியிருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ந. செல்வகுமார். புயல் தீவிரம் குறையாமல் வேதாரண்யம் பகுதியைக் கடக்கும் என செல்வகுமார் கூறியது போலவே நிகழ்ந்திருக்கிறது.

ந செல்வகுமார் இன்னொரு வெதர்மேன்

பாதிப்புகள் குறித்த அவருடைய முன் அனுமானமும் சரியாகவே இருந்திருக்கிறது. நம் எல்லோருக்கும் தெரிந்த தமிழ்நாடு வெதர்மேன் கடந்த சில வருடங்களாக வானிலை குறித்த தன்னுடைய துல்லியத் தகவல்களை பகிர்ந்ததன் மூலம் பிரபலம் ஆனார். ந செல்வகுமார் கடந்த பதினெட்டு வருடங்களாக வானிலை கணித்து நண்பர்களுடன் பகிர்ந்து வருகிறார். அப்போது போதிய தொழில்நுட்ப வசதியின்றி அடையாளமற்றுப் போனார் செல்வகுமார். தற்போது 'நம்ம உழவன்'என்கிற அலைபேசிச் செயலி மூலம் வானிலை குறித்து அவர் கொடுத்து வரும் தகவல்கள் சரியாகவே இருப்பதால் பல தரப்பிலிருந்து அவருக்கு பாராட்டுக் குவிகிறது. காலம் தாழ்த்தி இவரைப் பற்றி தெரிய வந்தாலும் தமிழ்நாட்டுக்கு இன்னொரு வெதர்மேன் கிடைத்துவிட்டார் எனப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

வெதர்மேன்

 

இந்தத் தருணத்தில் ஒரு சோகம் என்னவென்றால், இந்த கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து நாம் மீள்வதற்கு போராடிக் கொண்டிருக்கையில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெய்யும்போது மேற்கொண்டு 6 புதிய புயல்கள் உருவாகும் என செல்வகுமார் கணித்துக் கூறியிருப்பதுதான்.