மூடப்படுகிறதா எஸ்.இ.டி.சி. போக்குவரத்துக்கழகம்? பணியாளர்கள் எதிர்ப்பு | Transport labors against SETC service shut down

வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (19/11/2018)

கடைசி தொடர்பு:19:35 (19/11/2018)

மூடப்படுகிறதா எஸ்.இ.டி.சி. போக்குவரத்துக்கழகம்? பணியாளர்கள் எதிர்ப்பு

மூடப்படுகிறதா எஸ்.இ.டி.சி. போக்குவரத்துக்கழகம்? பணியாளர்கள் எதிர்ப்பு

ரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சில வழித்தடங்களை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு, போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாடு அரசு மாநிலப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) ஆகியவற்றின் கீழ், தொலைதூரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இரு போக்குவரத்துக் கழகங்களையும் போக்குவரத்துத்துறை வட்டாரத்தில் `சகோதரக் கழகங்கள்’ என்று அழைப்பார்கள். இந்தநிலையில், இப்போது விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சில வழித்தடங்களின் நிர்வாகத்தை, தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு, சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளார்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 

போக்குவரத்து - எஸ்.ஈ.டி.சி

இதுதொடர்பாக, போக்குவரத்துக்கழகப் பணியாளர்கள் சிலரைத் தொடர்பு கொண்டோம். ``தமிழக அரசின் அலட்சியப் போக்கால், விரைவுப் போக்குவரத்துக் கழகம் அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது” என்று விரக்தியுடன் பேச ஆரம்பித்தனர். ``விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், ஸ்லீப்பர், குளிர்சாதன வசதியுடன் ஸ்லீப்பர் (ஏ.சி), டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் போன்ற பிரிவுகளில் மொத்தம் 1080 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பேருந்துகளை இயக்க ஓட்டுநர், நடத்துநர், பராமரிப்புப் பணியாளர் என மொத்தம் 6,500 ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், இருப்பது என்னவோ 5000 ஊழியர்கள் மட்டுமே. கிட்டத்தட்ட 1,500 ஊழியர்கள் பற்றாக்குறையாக இருக்கிறார்கள். இதனால், ஓட்டுநர்களும் நடத்துநர்களும் `இரட்டிப்புப் பணி‘ (Double Duty) பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

இந்தப் பணியிடங்களை நிரப்பாததால் ஏற்படும் கூடுதல் பணிச்சுமை, மற்ற ஊழியர்களின் தலையில் சுமத்தப்படுகிறது. பயணிகளின் நலன் கருதி, வார நாள்களில் ஓரளவுக்குச் சமாளிக்க முடிந்தாலும், வார இறுதி நாள்களில் அதிகளவிலான பணிச்சுமையால் பணியாளர்கள் கடும் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். எஸ்.ஈ.டி.சி வழித்தடங்கள் எல்லாமே 300 கிலோ மீட்டருக்கு அதிகமான நீண்ட வழித்தடங்கள். கிட்டத்தட்ட 15 மணிநேரம் வரை தொடர்ச்சியாகப் பேருந்துகளை இயக்குவதால், ஓட்டுநர்களும் நடத்துநர்களும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். தீபாவளி சமயத்தில் வெளிப்படையாகக் கண்ணீர் விட்டு அழுத பணியாளர்களும் இருக்கிறார்கள்” என்றவர்கள், விரைவுப் போக்குவரத்துக் கழக வழித்தடங்களைக் கைமாற்றும், அரசின் நடவடிக்கை குறித்து விவரித்தனர்.

``காலிப் பணியிடங்களை நிரப்புவதற்குப் பதிலாக, விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் வழித்தடங்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கையில் ஒப்படைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக, சேலம் மண்டலத்தில் 17 வழித்தடங்கள், திருநெல்வேலி மண்டலத்தில் 19 வழித்தடங்கள் என மொத்தம் 36 வழித்தடங்களை, கைமாற்றிவிடத் திட்டமிட்டுள்ளனர். இனிமேல் அந்த வழித்தடங்களில் எஸ்.ஈ.டி.சியின் சொகுசுப் பேருந்துகள் (2*2) இயக்கப்படாது. அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் சாதாரணப் பேருந்துகளே (3*2) இயக்கப்படும். 

அந்த வழித்தடங்களில் இயங்கி வந்த எஸ்.இ.டி.சி பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். அந்தப் பேருந்துகளை இயக்கி வந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், மற்ற வழித்தடங்களுக்கு மாற்றப்படுவார்கள். அந்த வழித்தடங்களில், இதுவரை எஸ்.இ.டி.சி பேருந்துகளில் பயணித்துப் பழகிய பயணிகள், இனிமேல் ஆம்னி பேருந்துகளை நாட ஆரம்பிப்பார்கள். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். ஆனால், இதை அரசு கருத்தில் கொள்வதாக தெரியவில்லை” என்று வேதனை தெரிவித்தனர் ஊழியர்கள்.

``போக்குவரத்துக் கழகங்களில் பணியாளர்களின் பற்றாக்குறை ஒருபுறம் துன்புறுத்துகிறதென்றால், இன்னொரு புறம் பேருந்துகளின் தரமோ அதைவிட மிகப்பெரும் பிரச்னையாக இருக்கிறது” என்கிறார்கள் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர். ``இயக்கத்தில் இருக்கும் 1050 பேருந்துகளில் 100 பேருந்துகள் மட்டுமே நல்ல நிலையில் இருக்கின்றன. 400 பேருந்துகள் ஓரளவுக்கு ஓட்டும் நிலையில் இருக்கின்றன. ஆனால், 500 பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. அவையெல்லாம் எத்தனை நாளைக்குத் தாக்குப்பிடிக்கும் என்ற உறுதியில்லாமல் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள், பணியாளர்கள். 

எஸ்.ஈ.டி.சி

ஆம்னிப் பேருந்துகளுக்கு நிகராக எஸ்.இ.டி.சி பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கிறது, அரசு. ஆனால், ஆம்னிப் பேருந்துகளின் தரத்தில் பாதி அளவுக்குக்கூட எஸ்.இ.டி.சி பேருந்துகளின் தரம் இல்லை. இதனால், எஸ்.இ.டி.சிக்குப் பதிலாக ஆம்னிப் பேருந்துகளையே பயணிகள் அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களும் தங்கள் விருப்பத்துக்கு டிக்கெட் விலையை நிர்ணயித்துக் கொள்கிறார்கள். விரைவுப் பேருந்துக் கழகத்தில் இருக்கும் குறைபாடுகளை நீக்கினால், ஆம்னிப் பேருந்துகளின் கொட்டத்தை அடக்க முடியும். ஆனால், இந்த விஷயத்தில் அரசு அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. 

ஆக, பணியாளர்கள் நலனையும் கண்டு கொள்வதில்லை, பயணிகளின் நலனையும் கருத்தில் கொள்வதில்லை, இந்த அரசு" என்றவர்கள், ``இந்த லட்சணத்தில், கேரள அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, இன்னும் 50 வழித்தடங்களை அதிகரிக்க இருக்கிறார்கள். அந்த வழித்தடங்களும் செயல்பாட்டுக்கு வரும்போது, பணிச்சுமை மேலும் அதிகரிக்கும். பணியாளர்கள் இன்னும் வதைக்கப்படுவார்கள். 

அதனால், பற்றாக்குறையாக இருக்கும் ஊழியர் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்புவதுடன், தரமான பேருந்துகளையும் இயக்க ஆரம்பித்தால் மட்டுமே, விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைக் காப்பாற்ற முடியும். இல்லையென்றால் இழுத்து மூட வேண்டியதுதான்” என்று முடித்தனர். 

``போக்குவரத்துத் துறையின் கெளரவமாகக் கருதப்படுகிறது, விரைவுப் போக்குவரத்துக் கழகம். அதை அரசு காப்பாற்ற வேண்டும்” என்பதே, பணியாளர்கள் மற்றும் பயணிகளின் எதிர்பார்ப்பு. 


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை