வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (19/11/2018)

கடைசி தொடர்பு:17:28 (19/11/2018)

ஃபேக்ஸ் வந்த 10 நிமிடத்தில் 3 பேரும் விடுதலை! - ரகசியம் காத்த வேலூர் சிறைத்துறை

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மேலிடத்தில் இருந்து வந்த திடீர் உத்தரவையடுத்து, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க-வினர் மூன்று பேரும் அடுத்த 10 நிமிடத்தில் விடுதலை செய்யப்பட்டனர். சிறை வளாகத்துக்குள் ஆட்டோ வரவழைக்கப்பட்டு அவர்கள் ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ‘பிளசன்ட் ஸ்டே ஹோட்டல்’ வழக்கில் கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் வன்முறையில் ஈடுபட்டனர். தர்மபுரி இலக்கியம்பட்டியில் வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த கோரச் சம்பவத்தில் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகிய மூன்று மாணவிகள் தீயில் கருகி சாம்பலாகினர். இந்த வழக்கில் அ.தி.மு.க பிரமுகர்கள் நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன் மற்றும் முனியப்பன் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர், மூவரின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

சிறை

இந்த நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் காரணம் காட்டி 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவிக்கும் நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள் மூவரையும் விடுதலை செய்ய ஆளுநருக்குத் தமிழக அரசு பரிந்துரை செய்தது. விடுதலைப் பரிந்துரையை ஆளுநர் முதலில் ஏற்கவில்லை. ‘பஸ் எரிப்பு திட்டமிட்டு நடக்கவில்லை. உணர்ச்சி வசப்பட்டு நடந்தது’ என்று ஆளுநருக்குத் தமிழக அரசு மீண்டும் பரிந்துரைத்தது. இதையடுத்து, தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள் மூவரையும் விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்தார். உடனடியாக, சென்னையிலிருந்து சிறைத்துறை ஏ.டி.ஜி.பி கனகராஜிடமிருந்து ‘நேற்று தேதி’ குறிப்பிடப்பட்ட ‘ஃபேக்ஸ்’ இன்று மதியம் சரியாக 12 மணியளவில் வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உத்தரவு

அடுத்த 10 நிமிடத்தில் சிறையில் இருந்த அ.தி.மு.க-வினர் மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். சிறைக்குள் ஆட்டோ வரவழைக்கப்பட்டது. யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மூவரையும் சிறைத்துறை அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர். ரகசியமாக 10 நிமிடத்தில் விடுதலை செய்தது ஏன் என்பது குறித்து சிறைத்துறை தரப்பில் விசாரித்தபோது, பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘‘தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள் மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்தபோதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தமிழக அரசு, மூவரையும் விடுதலை செய்வதில் தீவிரம் காட்டியது. இன்று காலை வேலூர் சிறைக்கு மேலிடத்தில் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது. தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள் மூவரையும் விடுதலை செய்வதற்கான பணிகளைத் தொடங்குமாறு மேலிடத் தரப்பு உத்தரவிட்டுள்ளது. அப்போது ‘விடுதலை ஆணை’ அனுப்பப்படவில்லை. ‘எப்போது வேண்டுமானாலும் மேலிடத்தில் இருந்து மறுபடியும் அழைப்பு வரலாம்’ என்பதால் வேலூர் சிறைத்துறையினர் மூவர் விடுதலைக்கான பணிகளை தீவிரமாகச் செய்தனர்.

வேலூர் சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், ‘பத்திரிகையாளர்கள், ஊடகங்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மூவரும் விடுதலை செய்யப்பட்ட பிறகே எஸ்.பி அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் கசிந்தால், பல்வேறு அமைப்புகள், கொல்லப்பட்ட மாணவிகளின் உறவினர்கள் சிறைக்கு முன்பு திரண்டுவிடுவார்கள். விடுதலையாகும் மூவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும். ரகசியம் காக்க வேண்டும் என்பது மேலிட உத்தரவு. இந்தத் திட்டத்தில் கொஞ்சம் இடையூறு ஏற்பட்டாலும் நமக்குத்தான் பிரச்னை’’ என்று சிறைக்காவலர்களுக்கு அவர் எச்சரிக்கையோடு அறிவுறுத்தினார். ஆட்டோவும் கொண்டு வரப்பட்டு சிறை வளாகத்துக்குள் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. சரியாக மதியம் 12 மணி. சிறைத்துறை ஏ.டி.ஜி.பி அலுவலகத்தில் இருந்து ஃபேக்ஸ் வந்தது. அதில், ‘most immediate’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்த 10 நிமிடத்தில் அ.தி.மு.க-வினர் மூவரும் விடுதலை செய்யப்பட்டு ஆட்டோவில் அனுப்பி வைக்கப்பட்டனர். 12.20 மணிக்கு அவர்கள் சென்றுவிட்டனர். விடுதலையான அ.தி.மு.க-வினரின் உறவினர்களுக்குக்கூட தகவல் தெரிவிக்கப்படவில்லை. திட்டமிட்ட படி, வேலூர் எஸ்.பி அலுவலகத்துக்கு சிறைத்துறையினர் கடைசியாகவே தகவல் தெரிவித்தனர். ‘விடுதலையான மூவருக்கும் ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருந்தால் நாங்கள் என்ன பதில் சொல்வது. முன்கூட்டியே எங்களுக்குத் தகவல் சொல்லியிருக்க வேண்டாமா’ என்று சிறைத்துறையினரிடம் உளவுத்துறை போலீஸார் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தொடர்புடைய மூவர் விடுதலையில் தமிழக அரசு அக்கறை காட்டியது பல்வேறு அமைப்புகளை கொதிப்படைய செய்துள்ளது.