வெளியிடப்பட்ட நேரம்: 18:21 (19/11/2018)

கடைசி தொடர்பு:18:36 (19/11/2018)

ரயிலில் வந்தது ஆட்டுக்கறியா... நாய்க்கறியா? -இறைச்சி சங்கத்தின் விளக்கம்

   நாய்கறி அல்லது ஆட்டு இறைச்சியா என சோதனை நடத்தும் அதிகாரிகள்

``இறைச்சியின் வால் பகுதியைப் பார்த்து அது நாய்க்கறி என்ற தகவல் பரப்பியது தவறானது. ஆய்வுக்குப்பிறகுதான் அது எந்த விலங்கின் இறைச்சி என்பதை தெரிவித்திருக்க வேண்டும்'' என்று தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் அலி தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை எழும்பூருக்கு தெர்மோகோல் பாக்ஸில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி கொண்டு வரப்பட்டது. அந்த இறைச்சி குறித்து ரகசியத் தகவல் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த அதிகாரிகள், தெர்மோகோல் பாக்ஸைப் பிரித்து ஆய்வு செய்தனர். அப்போதுதான் கொண்டு வரப்பட்டது ஆட்டு இறைச்சி அல்ல, நாய்க்கறி என்ற தகவல் பரவியது. இதனால், சென்னை மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இதனால் அவைகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆய்வுக்காக பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பினர். பரிசோதனைக்குத் தேவையில்லாத இறைச்சிகளைக் குப்பைக்கிடங்குக்குக் கொண்டுசென்று அழித்தனர். இந்த நிலையில், ஜோத்பூரிலிருந்து ரயிலில் கொண்டு வரப்பட்டது ஆட்டு இறைச்சிதான் என்று திருவான்மியூரைச் சேர்ந்த ஷகிலாபானு, புதுப்பேட்டையைச் சேர்ந்த அல்தாப் ஆகியோர் தெரிவித்தனர். அதற்கான ரசீதுகள் தங்களிடம் இருப்பதாக அவர்கள் கூறினர். நாய்க்கறியா, ஆட்டு இறைச்சியா என்பதை இன்னமும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் உறுதிப்படுத்தவில்லை. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ராயபுரம் அலியிடம் பேசினோம். 

 சென்னையில் தினமும் இறைச்சிக்காக எத்தனை ஆடுகள், மாடுகள் அறுக்கப்படும்? 

நாய்கறி விவகாரத்தில் பேசும் அலி``சென்னையைப் பொறுத்தவரை புளியந்தோப்பு, வில்லிவாக்கம் சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் ஆட்டுத் தொட்டிகள் உள்ளன. அங்கு தினமும் 3,000 ஆடுகள், 200 மாடுகள் அறுக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த எண்ணிக்கை இருமடங்காகும்"

எதற்காக சென்னையை தவிர்த்து வெளிமாநிலங்களிலிருந்து இறைச்சிகள் கொண்டு வரப்படுகின்றன? 

``விலைதான் காரணம். சென்னையில் மொத்த சேல்ஸில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், வடமாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் இறைச்சியின் ஒரு கிலோ விலை 350 முதல் 400 ரூபாய்தான். இதனால்தான் வடமாநிலங்களிலிருந்து இறைச்சிகள் ரயில்மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன" 

சென்னை  எழும்பூர் ரயில் நிலையத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது ஆட்டு இறைச்சியா, நாய்க்கறியா? 

``தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில ஆடுகளின் வால் சிறியதாக இருக்கும். ஆனால் ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் வளரும் ஆடுகளுக்கு வால் பகுதி நீளமாக இருக்கும். எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளின் வால்பகுதி நீளமாக இருந்ததால்தான் அது நாய்க்கறி என்ற தகவல் பரப்பப்பட்டுவிட்டது. எந்தவித ஆய்வும் நடத்தாமல் அதை நாய்க்கறி என்று எப்படி உறுதிப்படுத்தமுடியும். ஆய்வு அறிக்கை வெளியான பிறகுதான் எந்த விலங்கின் இறைச்சி என்பதை உறுதிப்படுத்த முடியும். சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகள் கொண்டுவரப்படுவதை அதிகாரிகள் தடுக்கலாம், பறிமுதல் செய்யலாம். ஏன், சம்பந்தப்பட்டவர்களுக்கு அபாராதம் கூட விதிக்கலாம். தற்போது எழும்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி குறித்த அறிக்கையை விரைவில் வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நாய் இறைச்சி என்று ஆய்வின் முடிவு வந்தால் அதை சென்னைக்கு கொண்டு வந்தவர்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். தற்போது பரப்பப்பட்ட தகவலால் இறைச்சி வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது."

 உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்த இறைச்சியின் ஆய்வு முடிவுக்காக காத்திருக்கிறோம். அதன்பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

 இறைச்சியை ஜோத்பூரிலிருந்து சென்னைக்கு கொண்டு வந்த ஷகிலாபானு மற்றும் அல்தாப் ஆகியோரை தொடர்புகொள்ள பலமுறை முயன்றோம். ஆனால், அவர்களின் கருத்தைப் பெறமுடியவில்லை. பரிசீலனைக்குப்பிறகு அவர்களின் விளக்கத்தை வெளியிடத் தயாராக இருக்கிறோம்.