வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (20/11/2018)

கடைசி தொடர்பு:05:29 (20/11/2018)

"படப்பிடிப்புக்கு இனி யாரையும் அனுமதிக்க மாட்டோம்"- வடசென்னை மீனவர்கள் முடிவு

மீன்பிடித் தொழிலை  கொச்சைப்படுத்தி எடுக்கப்படும் சினிமா சூட்டிங்கிற்கு அனுமதி அளித்தால் துறைமுக நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்துவோம் என தென்னிந்திய மீனவர் சங்க தலைவர் கு.பாரதி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த வடசென்னை திரைப்படத்தில் மீனவர்களை தவறாக சித்தரித்தாகக்கூறி பல்வேறு மீனவ அமைப்பினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். எங்கள் பகுதியிலேயே படப்பிடிப்பு நடத்தி எங்களையே வெற்றிமாறன் அவமானப்படுத்திவிட்டார் என்று மீனவ சங்க தலைவர் தயாளன் தலைமையில் வலுவாக தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து வடசென்னை படத்தில் அவர்களை புண்படுத்திய காட்சிகள் நீக்கப்பட்டன. ஆனாலும், இனியும் எந்த சினிமாக்குழுவையும் எங்கள் துறைமுகத்தில் அனுமதிக்க மாட்டோம். அனுமதிக்கக் கூடாது என்றும் காசிமேடு மீன்பிடி துறைமுக அலுவலகத்தில் கடிதம் சமர்பித்து இருக்கிறார்கள்.

கடந்த வாரம் காசிமேடு துறைமுகத்தில் படபிடிப்புக்கு வந்த ஒரு குழுவையும் மீனவர்கள் வெளியே அனுப்பி இருக்கிறார்கள். அதற்குப் பிறகு இந்த மக்களை எந்த விதத்திலும் தவறாக சித்தரிக்கவில்லை என படக்குழுவினர் கடிதம் கொடுத்த பிறகே அவர்கள் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 "இனி படப்பிடிப்புக்கு யாரையும் அனுமதிக்க மாட்டோம். தங்களுக்கு வருமானம் கிடைக்கிறது என்பதற்காத மீனவர்களையும், மீன்பிடித் தொழிலையும்  கொச்சைப்படுத்தி எடுக்கப்படும் சினிமா சூட்டிங்கிற்கு சென்னை மீன்பிடித் துறைமுக வளாகத்திற்குள் அனுமதி அளிக்கும் சென்னை துறைமுக நிர்வாகத்தை  வன்மையாகக் கண்டிக்கிறோம்.இது போன்ற சினிமா சூட்டிங்கிற்கு மீண்டும் அனுமதியளித்தால் சென்னை துறைமுக நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தென்னிந்திய மீனவர் நலச் சங்கத் தலைவர் கு.பாரதி நம்மிடம் தெரிவித்தார்.