மரக்காணம் கலவரத்துக்கு காரணம் திருமாவளவன்: காடுவெட்டி குரு

அரியலூர்: மரக்காணத்தில் நடந்த கலவரத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தான் காரணம் என வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரியலூர் மாவட்டம், வென்மான்கொண்டான் கிராமத்திலிருந்து செல்வராஜ் என்றவர், மகாபலிபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு கூட்டத்துக்கு சென்ற இடத்தில் வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து விட்டார்.

செல்வராஜின் இறுதி சடங்கு இன்று அவரது வீட்டில் நடந்தது. இதில் வன்னியர் சங்க தலைவர் குரு, அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ''வன்னியர் சங்க கூட்டத்துக்கு சென்று வந்த வன்னியர் சங்கத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் தூண்டுதலின் பேரில் இக்கொலை சம்பவம் நடந்துள்ளது. இக்கலவரத்தை தூண்டியவர்கள் யார் என்பதை ஆராய்ந்து உண்மையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதிகளை அமைத்து விசாரணை செய்ய வேண்டும். மேலும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

சித்திரை முழு நிலவு கூட்டத்தை கலைப்பதற்காகவே திருமாவளவன் தலைமையில் மரக்காணத்தில் நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே தலித்துக்களின் கூட்டத்தை திட்டமிட்டு நடத்தியுள்ளனர். மரக்காணத்தில் கலவரம் ஏற்பட போலீசும் ஒரு முக்கிய காரணம். இந்த தமிழக அரசு அய்யாவிடம் இருந்த காவல் பாதுகாப்பை வாபஸ் வாங்கி விட்டது. பாதுகாப்பை நம்பி நாங்கள் இல்லை. அய்யாவுக்காக இரண்டரை கோடி வன்னிய மக்களும் உயிரைக்கூட கொடுக்க தயாராக உள்ளோம். மேலும் எங்கள் மீது ஒடுக்குமுறையை தொடர்ந்தால் எங்களது விசுவரூபத்தை காட்ட வேண்டியது வரும்'' என்றார்.

எம்.ராமசாமி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!