மூவர் விடுதலை பற்றி கோகிலவாணியின் தந்தை என்ன நினைக்கிறார்? | namakkal student kokilavaani's father shocked about the release of dharmapuri bus fire convicts

வெளியிடப்பட்ட நேரம்: 17:07 (21/11/2018)

கடைசி தொடர்பு:17:07 (21/11/2018)

மூவர் விடுதலை பற்றி கோகிலவாணியின் தந்தை என்ன நினைக்கிறார்?

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த  மூவரும் நேற்று காலை விடுவிக்கப்பட்டனர். ``எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க ஒப்புதல் வழங்குவதாக" ஆளுநர் அறிவித்துள்ளார்.

மூவர் விடுதலை பற்றி  கோகிலவாணியின் தந்தை என்ன நினைக்கிறார்?

தருமபுரியில் பேருந்துக்குத் தீவைக்கப்பட்ட சம்பவத்தில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் மரணத்துக்கு காரணமான மூவர் விடுதலை செய்யப்பட்டிருப்பதன் மூலம் தமிழக அரசு பச்சைத்துரோகம் செய்து விட்டதாக, எரித்துக் கொல்லப்பட்ட மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தை ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த  மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். ``எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, நன்னடத்தை அடிப்படையில் அவர்களை விடுவிக்கத் தமிழக அரசு அனுப்பி பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்குவதாக"  ஆளுநர் அறிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் கடந்த 2000-வது ஆண்டில் ஜெயலலிதா குற்றவாளி எனத் தீர்ப்பளித்து அவருக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் கலவரத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற கலவரத்தில் இலக்கியம்பட்டி என்ற இடத்தில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேருந்துக்குத் தீ வைக்கப்பட்டது. இதில், கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூன்று மாணவிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். கோகிலவாணியின் தந்தை - தர்மபுரி பேருந்து எரிப்பு விடுதலை

இந்த வழக்கில், 2006-ம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர்கள் நெடுஞ்செழியன், மாது (எ) ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்த நிலையில்,எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுவிக்கத் தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி, தருமபுரி பேருந்து எரிப்பு  வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவரும் நவம்பர் 19-ம் தேதி விடுவிக்கப்பட்டனர். ``நன்னடத்தை அடிப்படையில் அவர்களை விடுவிக்க ஒப்புதல் வழங்கியதாக" தமிழக ஆளுநர் அறிவித்துள்ளார்.

மூன்று பேர் விடுதலை ஆனது குறித்து உயிரிழந்த மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தையிடம் கேட்டோம். ``கடந்த 2000-ம் ஆண்டு என் மகள் உட்பட மூன்று மாணவிகளையும் தீவைத்துக் கொளுத்திய நபர்களுக்கு ஒரு நீதிபதி தூக்குத் தண்டனை விதிக்கிறார். மற்றொரு நீதிபதி ஆயுள் தண்டனையாகக் குறைக்கிறார். அப்படி என்றால் முதல் நீதிபதி அளித்த தீர்ப்பு தவறா?. ஒரு கோர்ட்டு சொன்ன தீர்ப்புக்கு, மற்றொரு கோர்ட்டில் சீராய்வு மனு என்று ஒன்றை வைத்துள்ளனர். கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்றாத அரசு எதற்கு? இது ஜனநாயகமா இல்லை சர்வாதிகாரமா? நீதி, நேர்மை கெட்டுப் போய்விட்டது. கோகிலவாணி இறந்த பிறகு படுத்தபடுக்கையான அவரது தாயார், கடந்த ஆண்டு இறந்து விட்டார். 

எதற்கெடுத்தாலும் லஞ்சம், லாவண்யம் என்று உள்ள சூழலில் தமிழகத்தில் நீதியை எப்படி எதிர்பார்ப்பது? அவர்கள், `உணர்ச்சிவசப்பட்டு விட்டார்கள்’ எனக் கூறுகிறார்கள். அதை ஏற்க முடியாது. `ஆளுநர் முதலில் விடுவிக்க முடியாது' என்று அறிவிக்கிறார். ஆனால், தற்போது அதே ஆளுநர்தான் மூவரின் விடுதலைக்கும் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். இதற்கிடையில் என்ன நடந்தது? மூன்று மாணவிகளின் மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லை. கோர்ட்டு தீர்ப்பைக் கொடுத்தும் அதை நிறைவேற்றாத அரசு இங்கு இருக்கிறது. அப்படியென்றால் எதற்கு சட்டம், ஒழுங்கு, நியாயம், தீர்ப்பு என்று வைத்து இருக்கிறார்கள். இதெல்லாம் பச்சைத்துரோகம். அ.தி.மு.க பிரமுகர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்தது வருத்தம் அளிக்கிறது" என்றார் ஆதங்கத்துடன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்