வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (20/11/2018)

கடைசி தொடர்பு:19:31 (20/11/2018)

மூவர் விடுதலைக்குக் காரணம் சொன்ன ஆளுநரே... எழுவர் விடுதலைக்குப் பதில் என்ன?

``திமூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்யும் ஆளுநர், 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் எழுவர் விடுதலைக்குக் காலம்தாழ்த்துவது ஏன்?’’ என்ற கேள்வி இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.

ஏழு பேர் விடுதலை எப்போது

கடந்த 2000-வது ஆண்டு ஜெயலலிதாவுக்கு 'பிளஸன்ட் ஸ்டே' ஹோட்டல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தர்மபுரியில் வேளாண் கல்லுாரி மாணவ-மாணவிகள் சென்ற பேருந்து, அ.தி.மு.க-வினரால் தீயிட்டுக் கொளுத்தபட்டது. இதில் மூன்று மாணவிகள் பலியாகினர். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேருக்கு சேலம் நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது, இந்தத் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் துாக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. நெடுஞ்செழியன், மது, முனியப்பன் ஆகிய மூவரும் ஆயுள் கைதிகளாகச் சிறையில் இருந்தனர். இந்நிலையில் எம்.ஜி.ஆர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடைத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. 

இதுகுறித்து தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பிய பட்டியலில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற மூவரின் பெயரும் இருந்தது. அந்த மூவரை விடுவிப்பது குறித்து மீண்டும் பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசிடம் மூவர் குறித்த பைலை திருப்பி அனுப்பியது. இந்நிலையில், பஸ் எரிப்பு குற்றவாளிகள் கடந்த திங்கள்கிழமை அன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஆளுநர் மாளிகை இதுகுறித்து அளித்த விளக்கத்தில், “ஒவ்வொரு குற்றவாளியின் பின்னணியையும் ஆராய்ந்து ஒப்புதலளித்த ஆளுநர், தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள் நெடுஞ்செழியன், மது, முனியப்பன் ஆகிய மூவரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை மட்டும் அரசின் மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்பினர். ஆனால், இந்தத் தீர்மானம் எந்த மாற்றமும் செய்யப்படாமல் மீண்டும் அக்டோபர் 25-ம் தேதி ஆளுநரின் பார்வைக்கு மீண்டும் வைக்கப்பட்டது.

தர்மபுரி பேருந்து எரிப்பு - 3 பேர் விடுதலை

இதுகுறித்து அக்டோபர் 31-ம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர். “யாரையும் கொலை செய்யும் நோக்கில் இவர்கள் செயல்படவில்லை. கலவரத்தில் உணர்ச்சிவசப்பட்டு செய்த நடவடிக்கை இது” என்று விளக்கம் கொடுத்ததாக ஆளுநர் தரப்பில் அவர்களை விடுதலை செய்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளார்கள். 

இதேபோல், ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. `இந்த ஏழுபேரையும் விடுதலை செய்ய வேண்டும்' என்று தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், மத்திய அரசின் கருத்தைக் கேட்ட பிறகே ஆளுநர் இதுகுறித்து முடிவெடுப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், `ஆளுநர் மாளிகை இந்த விஷயத்தில் மத்திய அரசின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை' என்று அறிவித்தது உச்சநீதிமன்றம். என்றாலும் இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் ஆளுநர் மாளிகை, கடந்த மூன்று மாதமாக எடுக்கவில்லை. அரசியல் சட்டப்பிரிவு 161-ன்படி, ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டுதான் தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள் மூவர் விடுவிக்கப்பட்டனர். அதே அரசியல் பிரிவைப் பயன்படுத்தி ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை பெற்றுள்ள எழுவரையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. தமிழக அரசும் ஆளுநர் முடிவெடுக்கும்படி நிர்பந்திக்க முடியாது என்று சொல்லியுள்ளது. ஆனால், 'மூவர் விடுதலை சட்டத்துக்கு புறம்பானது அல்ல' என்று பேட்டி அளித்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், எழுவர் விடுதலை பற்றி எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

ஆளுநர் அறிக்கையில் `மூவரும் உணர்ச்சிவசப்பட்டுச் செய்த காரியம்' என்று சுட்டிக்காட்டியுள்ளார். பேரறிவாளன் தனக்கும் ராஜீவ் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை பலமுறை சொல்லியுள்ளார். ``பதிமூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அடைந்தவர்களுக்குக் கருணை காட்டும் அரசும், ஆளுநரும் 27 ஆண்டுகள் சிறையில் இருப்பவர்களுக்கு காட்ட மறுப்பது ஏன்?" என்ற கேள்வி எழுந்துள்ளது. எழுவர் விடுதலை குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் திருமாவளன், ராமதாஸ், சீமான் உள்ளிட்டோர் ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தனர். “அமைச்சரவை பரிந்துரைத்தும் ஆளுநர் காலதாமதம் செய்வது அரசியல் சட்டத்தைக் கேலிகூத்தாக்குவதுபோல உள்ளது” என்று அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். ``மத்திய அரசிடமிருந்து ஆளுநருக்கு உள்ள அழுத்தம் காரணமாகவே ராஜீவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் எழுவர் விடுதலையை ஆளுநர் தள்ளிப்போடக் காரணம் என்ற தகவலும் உள்ளது. எழுவர் விவகாரத்தில் மத்திய அரசும் தயக்கம் காட்டுகிறது என்றே தெரிகிறது. குறிப்பாக, ஆளுநருக்கு நெருக்கமாக இருக்கும் உயர் அதிகாரி ஒருவர், 'எழுவர் விசயத்தில் எந்த முடிவும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம்' என்று ஆளுநரிடம் பக்குவமாக எடுத்து சொல்லியதால்தான் இந்த இழுபறி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆனால், இப்போது மூவர் விடுதலைக்கு ஆளுநர் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை அடிப்படையாக வைத்தே, ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக வைக்க முடிவு செய்துள்ளார்கள் தமிழக அரசியல் கட்சியினர். 


டிரெண்டிங் @ விகடன்