கஜாவால் சிதைந்த ஹோட்டல்; மக்களுக்கு இலவச உணவளிக்கும் அயூப்கான்! - நெகிழும் மல்லிப்பட்டினம் மக்கள் | hotel owner helps people who were affected in gaja storm

வெளியிடப்பட்ட நேரம்: 11:02 (21/11/2018)

கடைசி தொடர்பு:11:15 (21/11/2018)

கஜாவால் சிதைந்த ஹோட்டல்; மக்களுக்கு இலவச உணவளிக்கும் அயூப்கான்! - நெகிழும் மல்லிப்பட்டினம் மக்கள்

கஜா புயலால் தன்னுடைய ஹோட்டல் முழுவதும் சேதமடைந்தாலும், மக்கள் பசியில் இருக்கிறார்கள் என்று கூறி, உணவளித்து வருகிறார் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர்.

கஜா புயல்

கஜா புயல், எட்டு மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடியிருக்கிறது. புயலால் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து வீடற்றவர்களாகியுள்ளனர். புயல் முடிந்து ஐந்து நாள்களாகியும் நிவாரணம் கிடைக்காமலும், உணவுகள் கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகின்றனர். உதவிகள் கிடைக்காததால், பல ஊர்களில் தெருவோரங்களில் உணவு சமைத்து சாப்பிடுவதைப் பார்க்க முடிகிறது. உதவிக்காக பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. சென்னைப் பெருவெள்ளம், கேரளா வெள்ளம் போன்று கஜா புயலும் மனித நேயங்களைக் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரைத்துறையினர், சமூக அமைப்புகள், தனி மனிதர்கள் உட்பட பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகின்றனர். தங்களால் முடிந்தவற்றை நிவாரணப் பொருள்களாகவும், நிதியுதவியாகவும் அனுப்பிவருகின்றனர். 

இதேபோன்று, தனியார் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் செய்த உதவி நெகிழவைத்துள்ளது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்தவர்  அயூப்கான். இவர், அந்தப் பகுதியில் இரண்டு ஹோட்டல்கள் நடத்திவருகிறார். கஜா புயலில் சிக்கிய மல்லிப்பட்டினம், கடும் சேதங்களை எதிர்கொண்டுள்ளது. இந்த ஊர் மக்களில் பலர் வீடுகளை இழந்து நிர்கதி ஆகியுள்ளனர். வீடுகளைப் போன்று புயலிலிருந்து  அயூப்கானின் ஹோட்டலும் தப்பவில்லை. ஹோட்டல்களின் மேற்கூரைகள் சேதமடைந்து சின்னாபின்னமாகிவிட்டது.

ஆயூப்கான்

photo credit: @rameshibn

இதனால் கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளார் ஆயூப்கான். இருப்பினும் அதைப் பற்றி கவலைப்படாமல், மக்களுக்கு உணவில்லை என்பதால் கடந்த 3 நாள்களாக ஹோட்டலில் உணவு சமைத்து மக்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறார். ``புயலால் என்னுடைய இரண்டு ஹோட்டல்களும் சேதமடைந்துவிட்டன. எனக்கு இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டம்தான். ஆனால் அதைவிடப் புயலால் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளார்கள். அவர்கள் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காகக் கடந்த மூன்று நாளாக உணவு வழங்கி வருகிறேன்" எனக் கூறும் அவருக்கு, உணவு சமைக்க உதவியாக இருந்துவருகிறார்கள் அந்தப் பகுதி மக்கள். 

``வீட்டில் சமைப்பதற்கு இடம் இல்லை. இடம் இருந்தாலும் தண்ணீர், மின்சார வசதிகள் இல்லை.  அதிகாரிகளும் வரவில்லை, அரசு உதவிகளும் கிடைக்கவில்லை. அதேநேரம், ஆயூப்கானின் ஹோட்டல் கடுமையாக பாதிக்கப்பட்டாலும் மூன்று நாள்களாக எங்களுக்கு இலவசமாக உணவளித்துவருகிறார். இவர் இல்லையென்றால், ஊர் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டிருப்போம்" என்று ஊர் மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

news credit: puthiyathalaimurai

நீங்க எப்படி பீல் பண்றீங்க