ரூ.500 தந்தால்தான் மின் இணைப்பு! - தவிக்கும் மக்களிடம் மின்வாரிய ஊழியர் அடாவடி | government worker asks 500 rs bribe for electricity connection in pudukottai

வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (21/11/2018)

கடைசி தொடர்பு:17:01 (22/11/2018)

ரூ.500 தந்தால்தான் மின் இணைப்பு! - தவிக்கும் மக்களிடம் மின்வாரிய ஊழியர் அடாவடி

கஜா புயலால் வீடுகள், உடைமைகளை இழந்து பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ள நேரத்தில் நகராட்சி மின் ஊழியர் மின் இணைப்பு வழங்க ரூ.500 லஞ்சம் கேட்ட சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம் கேட்கும் ஊழியர்

கஜா புயல் பாதிப்பால், புதுக்கோட்டை மாவட்டம் கடும் பாதிப்படைந்துள்ளது. மாவட்டத்தில் 60 சதவிகித மரங்கள் விழுந்ததில், லட்சக்கணக்கான மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால், மாவட்டமே கடந்த 6 நாள்களாக இருளில் மூழ்கி உள்ளது. மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் மின் விநியோகம் வழங்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான மின்சாரத்துறை ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டும், இன்னும் ஒரு கிராமத்துக்குக் கூட மின் விநியோகம் வழங்கப்படவில்லை எனப் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், அடப்பன்வயல் பகுதியில் மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு, மின்சாரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இங்கு, பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சி மின் ஊழியர் விஜயன் என்பவர் மின் இணைப்பு கொடுப்பதற்கு ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். அதை அப்பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவில், விஜயன் ரூ.500 லஞ்சம் கேட்பது பதிவாகி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள், `நாங்களே புயல் பாதிப்பில் இருந்து மீள முடியாமல், மின்சாரம் இல்லாமல் தத்தளித்து வருகிறோம். எங்களிடம் பணம் கேட்கிறீர்களே’ என்று பரிதாபமாக கேட்கின்றனர். தொடர்ந்து விஜயன், `300 ரூபாயாவது கொடுங்கள்’ என்று பேரம் பேசுகிறார். `அப்போது தான் சரி செய்து தருவோம்’ என்கிறார். அரசாங்க ஊழியர்தானே இலவசமாக மின் இணைப்பு வழங்கக்கூடாதா என்று பொதுமக்கள் கேட்கின்றனர். அதற்கு, விஜயன் `வேறு சில அதிகாரிகள் வருவார்கள் அவர்கள் இலவசமாக மின் இணைப்பு கொடுப்பார்கள்’ என்று கறாராக கூறுகிறார்

இதுகுறித்து நகராட்சி ஆணையர் சுப்பிரமணியனை தொடர்புகொண்டோம். அவர், இரண்டு முறை அழைப்பைத் துண்டித்து, மூன்றாவது முறை எடுத்தார். அப்போது சிக்னல் சரியாகக் கிடைக்கவில்லை என்று கூறி அழைப்பைத் துண்டித்தார் மீண்டும் அவரைத் தொடர்பு கொண்டபோது, இணைப்பைத் துண்டித்தார். அவரது தரப்பு விளக்கத்தைக் கொடுக்கும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர் அதையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.