இறைச்சியின் ஆய்வறிக்கையை வெளியிடாதது சந்தேகத்தை கிளப்புகிறது! - ஐகோர்ட்டில் வழக்கு | The petition has been filed in the Madras High Court seeking to file a report about Meat

வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (21/11/2018)

கடைசி தொடர்பு:16:35 (21/11/2018)

இறைச்சியின் ஆய்வறிக்கையை வெளியிடாதது சந்தேகத்தை கிளப்புகிறது! - ஐகோர்ட்டில் வழக்கு

ரயிலில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கடந்த 17-ம் தேதி ஜோத்பூரிலிருந்து சென்னை எழும்பூர் வந்த ரயிலில் 2,100 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது நாய்க்கறியா அல்லது கெட்டுப்போன ஆட்டிறைச்சியா எனப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்த நிலையில், இந்த இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆட்டுக்கறி

அந்த மனுவில்,  ``இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை உணவுத்துறை அதிகாரிகள் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே காவல்துறை பதிவு செய்த வழக்கில் விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட முக்கிய சட்டப்பிரிவுகள் சேர்க்கப்படவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி குறித்து ஆய்வு செய்ய சட்ட ஆணையரை நியமிக்க வேண்டும். வெளிமாநிலங்களிலிருந்து இறைச்சியைக் கொண்டு வருவதற்கான விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.