வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (21/11/2018)

கடைசி தொடர்பு:19:00 (21/11/2018)

`தமிழக அரசு சுயமரியாதையை அடகு வைத்திருக்கிறது!’ - சாடும் பவன் கல்யாண்

தமிழ்நாடு மத்திய அரசிடம் தன்மானத்தை இழந்து நிற்பதாக நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் விமர்சித்திருக்கிறார். 

பவன் கல்யாண்

ஆந்திர மாநில முன்னணி நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் சென்னையில் உள்ள  தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``திராவிடக் கொள்கைகள் வலுப்பெற வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கரின் சிந்தனை நிலைப்பட வேண்டும். தென்மாநிலங்களுக்கு ஒரு தலைநகரம் தேவை என்ற அந்தக் கருத்து உறுதியாக வேண்டும். இதற்கு தென்மாநிலங்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். மத்திய அரசை நிர்ணயிப்பதில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநில அரசியல் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே, தென்மாநிலங்கள் மத்திய அரசை நிர்ணயிக்கக் கூடிய சக்தியாக மாற வேண்டும். நடிகர் என்ற பிரபலத்தை வைத்துக்கொண்டு அதை மக்களிடம் ஓட்டாக மாற்ற முடியுமா என்பது கேள்விக்குறியே.

பவன் கல்யாண்

நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் மக்களின் செல்வாக்கைப் பெற கடினமாக உழைக்க வேண்டும்.. தேவை ஏற்பட்டால் ரஜினி உடனோ அல்லது கமலுடன் கைகோத்து செயல்படுவேன். ஆனால், அந்த நிலை ஏற்படாது. கடந்த தேர்தலின்போது பா.ஜ.க.உடன் இணைந்து பிரசாரம் செய்தேன். ஆனால், தற்பொழுது பா.ஜ.க-வின் செயல்பாடுகளைப் பார்த்து அதிருப்தியில் இருக்கிறோம். 2019-ல் ஆந்திர மாநில முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெறுவேன்” என்றார். தொடர்ந்து தமிழக அரசின் செயல்பாடு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ``தமிழக அரசு சுயமரியாதையை மத்திய அரசிடம் அடகுவைத்திருக்கிறது” என்று பதிலளித்தார். மேலும், திராவிட கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஆந்திராவின் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.