`கேரள அமைச்சர் ஒருவரிடமாவது அந்த எஸ்.பி குரலை உயர்த்தி கேள்வி கேட்பாரா?’ - பொன்.ராதாகிருஷ்ணன் | Minister Pon.Radhakrishnan slams kerala government over sabarimala issue

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (21/11/2018)

கடைசி தொடர்பு:20:40 (21/11/2018)

`கேரள அமைச்சர் ஒருவரிடமாவது அந்த எஸ்.பி குரலை உயர்த்தி கேள்வி கேட்பாரா?’ - பொன்.ராதாகிருஷ்ணன்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கண்ணீர் விட்டு அழுது தரிசனம் செய்தார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் என்னிடம் குரலை உயர்த்தி கேள்வி கேட்ட எஸ்.பி. கேரள அமைச்சர் ஒருவரிடமாவது அந்தக் கேள்வியைக் கேட்பாரா என ஆவேசமாகக் கேட்டார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று சபரிமலை சென்றார். நிலக்கல்லிலிருந்து அரசுப் பேருந்தில் சென்ற பொன்.ராதாகிருஷ்ணன் பம்பையிலிருந்து மலை ஏறி சபரிமலை சந்நிதானத்தை அடைந்தார். அங்கு ஐயப்ப சுவாமி முன்பு நின்று கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``எந்த ஆண்டும் சபரிமலை தரிசனத்தில் ஒரு அமைதி இருக்கும், இந்த ஆண்டு அந்த அமைதி இல்லை. சந்நிதானத்தில் அதிகமான போலீஸ் இருக்கிறார்கள்; ஆனால் பக்தர்கள் இல்லை.

சரணகோஷம் என்பது பக்தர்களின் மனதை ஒருநிலைப்படுத்துகிறது. ஆனால், சரணகோஷம் போடக் கூடாது எனத் தடை விதிக்கிறார்கள். எதற்காக இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தினார்கள் என எனக்குப் புரியவில்லை. இந்தக் கோயில் கேரளத்துக்கானது மட்டுமல்ல இந்த உலகிற்கானது. வாவர் சுவாமி சந்நிதானத்துக்கு அனுமதிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம். நிலக்கல்லிலிருந்து பம்பைக்குச் செல்லும் பேருந்தில் 50 பேர் செல்கிறார்கள். சபரிமலையில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவுக்கு என்ன அர்த்தம் என எனக்குப் புரியவில்லை. சபரிமலையிலிருந்து பக்தர்களை அகற்ற மாஸ்டர் பிளான் போடுகிறார்கள்.

நிலக்கல்லிலிருந்து அரசுப் பேருந்துகளை பம்பைக்கு இயக்கும் நீங்கள் ஏன் தனியார் வாகனங்களை விடவில்லை என்று நான் எஸ்.பி. யதி சந்திராவிடம் கேட்டேன். அதற்கு, `அரசுப் பேருந்தை அங்கு பார்க் செய்யமாட்டார்கள், தனியார் வாகனம் சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அப்படியானால் நீங்கள் போக்குவரத்துப் பொறுப்பை ஏற்றுக்கொள்வீர்களா?’ என என்னிடம் குரலை உயர்த்தி எஸ்.பி. கேள்வி கேட்கிறார். கேரளத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சரிடமாவது அந்த எஸ்.பி. என்னிடம் கேட்ட கேள்வியைக் கேட்பாரா. சபரிமலையில் 144 தடை உத்தரவை நீக்க வேண்டும். பக்தர்களின் வாகனங்களை பம்பை வரை அனுமதிக்க வேண்டும்" என்றார்.