கஜா புயல் பாதிப்பு - நாகையில் ஆய்வு செய்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்! | governor Reviewed gaja cyclone affected areas

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (21/11/2018)

கடைசி தொடர்பு:21:00 (21/11/2018)

கஜா புயல் பாதிப்பு - நாகையில் ஆய்வு செய்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டார்.

ஆளுநர்

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் கடந்த 6 நாள்களாக உணவு, குடிநீர் மற்றும் மின்சாரமின்றி மக்கள் தவித்து வருகின்றனர். வேதாரண்யம், நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி மற்றும் மின்சாரம் உடனடியாக வழங்குவதாக அறிவித்துள்ளது. நேற்று, கஜா புயல் பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வந்த முதல்வர், வானிலை மாற்றம் காரணமாக, பாதியில் தன் பயணத்தை முடித்துக்கொண்டார். இதையடுத்து, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``கஜா புயல் பாதித்த மாவட்டங்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்வதற்காக 20-ம் தேதி, இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு, 21-ம் தேதி முழுவதும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். 21-ம் தேதி இரவு அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் சென்று ஆளுநர் தங்குகிறார். அதன்பின்  22-ம் தேதி திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்கிறார்” என அறிவிக்கப்பட்டிருந்தது.

புரோகித்

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட சென்னையிலிருந்து விரைவு ரயில் மூலமாக இன்று நாகை வந்தடைந்தார். இன்று காலை ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கார் மூலம் தன் பயணத்தை தொடங்கிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாகப்பட்டினம் முதல் வேதாரண்யம் வரை பல கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார். சில இடங்களில் காரில் அமர்ந்தபடியே ஆய்வு செய்த ஆளுநர், சில இடங்களில் மட்டுமே இறங்கிச் சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். நாகை மகாராஜபுரம் பகுதியில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். குடிநீர், உணவு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா வேறு என்னென்ன வசதிகள் உங்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டறிந்தார். மேலும் தங்கள் தேவைகளை யார் பூர்த்தி செய்கிறார்கள்?. முகாம்களில் இருப்பவர்களுக்கு ஏதேனும் நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ வசதி கிடைக்கிறதா என்பதையும் மக்களிடம் கேட்டறிந்தார். வேளாங்கண்ணி அருகே வெள்ளப்பள்ளம், கச்சைவெளி, கள்ளிமேடு உள்ளிட்ட கிராமங்களை ஆய்வு செய்த தமிழக ஆளுநர் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு தார்பாலின் வழங்கினார்.

கஜா

மேலும் நாகப்பட்டினம் மாவட்டம் புஷ்பவனம் ஊராட்சியில் அரசு ஏற்படுத்தியிருக்கும் மருத்துவ முகாமை பார்வையிட்டார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம், தலைஞாயிறு உள்ளிட்ட மூன்று இடங்களில் இயங்கிவரும் மெகா கிச்சன் என்று சொல்லக்கூடிய தினம் ஒரு லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்படும் உணவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த இடங்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ் குமார் ஆகியோருடன் ஆய்வு செய்து உணவு தரமான முறையில் தயாரித்து மக்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதை ஆராய்ந்து பார்த்தார். பாதுகாப்பு காரணத்துக்காக எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி ஆளுநரின் பயணம் நடைபெற்றது. ஆளுநர், பாதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில் அந்த இடங்களில் காரை நிறுத்தச் சொல்வதையடுத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு தமிழக ஆளுநர் இறங்கி ஆய்வு மேற்கொண்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க