நெல்லையில் நடந்த சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம்! | 4 members of a family are dead in a road accident in nellai

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (21/11/2018)

கடைசி தொடர்பு:22:30 (21/11/2018)

நெல்லையில் நடந்த சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம்!

நெல்லை மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடுபத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலை விபத்து

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளைவலசை கிராமத்தைச் சேர்ந்தவர், சுரேஷ். தென்காசியில் உள்ள மர அறுவை ஆலையில் கூலித்தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இன்று மிலாது நபி விழாவையொட்டி குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் சுரேஷ், தன் மனைவி சக்தி மற்றும் 7 வயது மகன் அன்புச்செல்வன், 5 வயதான மகள் மதுபாலா ஆகியோரை அழைத்துக் கொண்டு, அருகில் உள்ள அருணாசலப்பேரி கிராமத்தில் வசிக்கும் உறவினரின் வீட்டுக்குச் சென்றார். 

அங்கு விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தென்காசி-கடையம் சாலையில் உள்ள எல்லைப்புளி பகுதியில் வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த ஆம்னி வேன், இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், இரு சக்கர வாகனத்தில் வந்த சுரேஷ், அவரின் மனைவி சக்தி, குழந்தைகள் அன்புச்செல்வன், மதுபாலா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இது குறித்து அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீஸார் விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.