கஜா புயல் மீட்புப் பணியில் வெளிநாட்டுப் பயணி! - குவியும் பாராட்டுகள் | Foreigner actively involved in Tanjore Gaja relief works

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (21/11/2018)

கடைசி தொடர்பு:22:00 (21/11/2018)

கஜா புயல் மீட்புப் பணியில் வெளிநாட்டுப் பயணி! - குவியும் பாராட்டுகள்

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் சேதுபாவாசத்திரம் பகுதியில் ஏராளமான மரங்கள் சாலை மற்றும் வீடுகளின் மீது விழுந்தன. இவற்றை அப்பகுதி மக்கள் அகற்றி வருகின்றனர். இந்த நிலையில், மரங்களை அகற்றும் பணியில் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரும் ஈடுபட்டு வருகிறார். அவரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

பீட்டர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடற்கரையோரப் பகுதிகளான அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், பேராவூரணி, மல்லிப்பட்டினம் பகுதிகளில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மேலும் தென்னை, தேக்கு, செம்மரம், நாட்டு மரங்களான வேம்பு, பூவரசு போன்ற மரங்கள் சாலை மற்றும் வீடுகளின் மீதும் விழுந்தன. இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாதனோடு போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் மக்கள், தன்னார்வலர்கள் என அனைவரும் தாங்களாகவே மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவது தொடர்கிறது. இந்த நிலையில், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் என்பவர், கஜா புயல் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடும் பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ள தகவலை தன் நண்பர் மூலமாக அறிந்தார். உடனே சென்னையிலிருந்து தன் நண்பருடன், அவர் ஆலோசனை பேரில் பீட்டர் காரிலேயே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சேதுபாவாசத்திரம் பகுதிக்கு வந்துள்ளார்.

பீட்டர்

அவர் வரும்போதே மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் அதற்குத் தேவையான பொருள்களை கையோடு வாங்கிக் கொண்டு தயார் நிலையில் வந்தார். பிறகு பள்ளத்தூரில் புயலால் கீழே விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டதோடு தொடர்ந்து செய்தும் வருகிறார். உள்ளூர் மக்களே புயல் பதிப்பால் உணவு, மின்சாரம் போன்ற  வசதிகள் இல்லாததால் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்கள் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டு வேகமாக செய்ய முடியாத சூழ்நிலை உள்ள  நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த பீட்டர் மக்கள் படும் துயரத்தைப் பார்த்து கண் கலங்கியதோடு வேகமாக புயல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். அவரின் இந்தச் செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி, நன்றியும் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க