குமரியில் கேரள முதல்வரின் உருவ பொம்மை எரித்துப் போராட்டம்! | Kumari Sangh parivar staged protest against Kerala CM in Thuckalay

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (21/11/2018)

கடைசி தொடர்பு:23:30 (21/11/2018)

குமரியில் கேரள முதல்வரின் உருவ பொம்மை எரித்துப் போராட்டம்!

சபரிமலை சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் குரலை உயர்த்தி கேள்வி கேட்ட எஸ்.பி.யைக் கண்டித்து சங்க்பரிவார் அமைப்பினர் குமரி மாவட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உருவபொம்மையை எரித்துப் போராட்டம் நடத்தினர்.

போராட்டம்

சபரிமலைக்குச் சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை பத்தணம்திட்டா எஸ்.பி. யதி சந்திரா தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தனியார் வாகனங்களை ஏன் பம்பையில் அனுமதிக்கவில்லை எனக் கேட்டதற்கு 'நீங்கள் போக்குவரத்துப் பொறுப்பை ஏற்றுக்கொள்வீர்களா?’ எனக் குரலை உயர்த்தி கேள்வி கேட்டார். கேரள அமைச்சர் ஒருவரிடமாவது நீங்கள் இப்படி குரலை உயர்த்தி கேள்வி கேட்க முடியுமா என பொன்.ராதாகிருஷ்ணன் வேதனையுடன் கூறினார். எஸ்.பி.யின் நடவடிக்கையைக் கண்டித்தும், சபரிமலையில் ஆசாரம் காக்க வேண்டும் என வலியுறுத்தியும் குமரி மாவட்டத்தில் சங்க்பரிவார் உள்ளிட்ட இந்து அமைப்பினர் தக்கலையில் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் திடீரென நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 3 கேரள அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்தனர். மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயனின் உருவ பொம்மையை எரித்து கோஷம் எழுப்பினர். இந்தப் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.