`ஸ்டெர்லைட் ஆலையின் நோக்கத்துக்கு எங்கள் பெயரைப் பயன்படுத்துவதா?’ - மக்கள் அதிகாரம் அமைப்பு கண்டனம் | Makkal Athigaram condemns sterlite industries over Fatima Babu video controversy

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (22/11/2018)

கடைசி தொடர்பு:00:00 (22/11/2018)

`ஸ்டெர்லைட் ஆலையின் நோக்கத்துக்கு எங்கள் பெயரைப் பயன்படுத்துவதா?’ - மக்கள் அதிகாரம் அமைப்பு கண்டனம்

``ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமாபாபு குறித்து வெளியான சர்ச்சை வீடியோவை மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிடவில்லை. மக்கள் அதிகாரம் அமைப்புக்கும் அந்த வீடியோவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என மக்கள் அதிகாரம் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. 

மக்கள் அதிகாரம்


இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர், தஞ்சாவூரைச் சேர்ந்த காளியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``அன்பார்ந்த தூத்துக்குடி மக்களே ! கஜா புயலால் டெல்டா உள்ளிட்ட ஏழு மாவட்ட மக்கள் குடிநீர், உணவு, உடை, மின்சாரம் இல்லாமல் கடந்த ஐந்து நாள்களாக தவித்து வருகின்றனர். வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து மக்கள் வீதியில் நின்று கதறுகிறார்கள். அவர்களுக்கு தமிழகமே ஆதரவுக் கரம் நீட்டி வருகிறது. மக்கள் அதிகாரத் தோழர்களும் முழுமையாக டெல்டா மக்களோடு களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இத்தகைய துயரமான சூழலில் ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலிகள், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வெளியிட்டதாக கூறி, வக்கிரமான ஒரு வீடியோவை நேற்றிரவு இணையத்தில் உலவ விட்டிருக்கிறார்கள். அந்த வீடியோவுக்கும் மக்கள் அதிகாரம் அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஸ்டெர்லைட் ஆலையின் நோக்கத்துக்கு எமது அமைப்பின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடும் மக்களைப் பிளவுபடுத்த கார்ப்பரேட் கிரிமினல்கள் எவ்வளவு கீழ்த்தரமான வழிமுறையையும் கையாள்வார்கள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்று. இத்தகைய  வீடியோக்களை பார்ப்பவர்கள் தயவு செய்து அவற்றைப் பகிராதீர்கள். ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக அகற்றும் வரை போராட்டத்தை ஒற்றுமையுடன் தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க