வெளியிடப்பட்ட நேரம்: 06:20 (22/11/2018)

கடைசி தொடர்பு:09:47 (22/11/2018)

"பினராய் விஜயன் இருமுடி கட்டும் காலம் வரும்" - தமிழிசை ஆவேசம்

பினராய் விஜயன் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்கும் காலம் வரத்தான்போகிறது. கறுப்பு என்பது ஆன்மிகம் என்பது எல்லோருக்கும் உணர்த்தப்படும். ஆன்மிக ஆட்சி தென்னக மாநிலங்களில் வர வேண்டுமென்று ஐயப்பன் நமக்கு உணர்த்துகிறார். அது நிறைவேறும்.

பினராயி விஜயன்

சபரிமலை விவகாரத்தில், கேரள அரசைக் கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் நேற்று கண்டனக் கூட்டம் நடந்தது. 'ஐயப்பா பாதுகாப்பு இயக்கம்' என்கிற அமைப்பினர் ஏற்படுத்திய இந்த கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தலைமையேற்றுப் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் டாக்டர் தமிழசை சௌந்தரராஜன், “பக்தியுடன் மாலை அணிந்து வரும் பக்தர்களை ஐயப்பனைப் பார்க்க விடாமல் திருப்பி அனுப்புகிறார்கள். பக்தியே இல்லாது வேண்டுமென்றே சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள். திருப்பி அனுப்ப வேண்டியது பக்தர்களை அல்ல, பினராய் விஜயனைத்தான். மக்கள் விரைவில் அவரை திருப்பி அனுப்புவார்கள்.

கேரள அரசு, ஒரு நெருக்கடியான நிலையை ஐயப்ப பக்தர்களுக்கு தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி தன் கடைசி அத்தியாயத்தை எழுதிவருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஒருகோடி பேர் சபரிமலைக்குச் செல்கிறார்கள். ஐயப்பனை பார்ப்பதற்குத் தடை நீடிக்க பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். மேலும், கோடிக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்கும் காலம் தொலைவில் இல்லை. ஏன், இதே பினராய் விஜயன் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்கும் காலம் வரத்தான்போகிறது. கறுப்பு என்பது ஆன்மிகம் என்பது எல்லோருக்கும் உணர்த்தப்படும். ஆன்மிக ஆட்சி தென்னக மாநிலங்களில் வர வேண்டுமென்று ஐயப்பன் நமக்கு உணர்த்துகிறார். அது நிறைவேறும்”  என்றார்.