வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (22/11/2018)

கடைசி தொடர்பு:09:01 (22/11/2018)

விடிய விடிய கொட்டித்தீர்த்த கன மழை... இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மிழகத்தில், நேற்று முதல் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.  கஜா புயல்  நாகை, புதுக்கோட்டை , தஞ்சையில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், சில இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலைகொண்டுள்ளது. இது, தாழ்வுமண்டலமாக வலுப்பெறும் என்பதால், அடுத்த இரண்டு நாள்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மழை.. பாலச்சந்திரன்

``வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். வரும் 23-ம் தேதி வரை மழை நீடிக்கும்'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் கூறியிருந்தார். 
இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்துவருவதால்,  பாதுகாப்பு கருதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (22/11/2018) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் நேற்று காலை தொடங்கிய  மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது.