விரைவில் மூடப்படும் 1.13 லட்சம் ஏடிஎம்-கள் - காரணங்களை அடுக்கும் வங்கிகள் கூட்டமைப்பு | 1.13 Lakh ATMs will Shut Down on May 2019

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (22/11/2018)

கடைசி தொடர்பு:10:25 (22/11/2018)

விரைவில் மூடப்படும் 1.13 லட்சம் ஏடிஎம்-கள் - காரணங்களை அடுக்கும் வங்கிகள் கூட்டமைப்பு

வரும் மே மாதத்துக்குள், இந்தியாவில் உள்ள 50 சதவிகித ஏடிஎம்-களை மூட வங்கிகள் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வங்கி ஏடிஎம்

உலகம் இயந்திரமயமாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், மக்களின் பணப் பரிவர்த்தனைகளில் முக்கியப் பங்காற்றிவருவது வங்கிகள்தான். மக்கள், தங்களுக்குத் தேவையான பணத்தை தேவைக்கேற்ப வங்கிகளின் ஏடிஎம்-கள் மூலமே எடுத்துவருகின்றனர். இந்தப் பழக்கம் நகரம், கிராமம் என அனைத்துப் பகுதிகளிலும் பின்பற்றப்படுகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு,  ஏடிஎம் பயன்பாடு மேலும் அதிகமானது. இதனால், அனைத்துப் பகுதிகளிலும் ஏடிஎம்-கள் நிறுவப்பட்டுள்ளன. தற்போது, இந்தியாவில் 2.38 லட்சம் ஏடிஎம்-கள் மக்கள் பயன்பாட்டுக்காக உள்ளன. இதற்கிடையே, இவற்றைப் பாதியாகக் குறைக்க வங்கிகள் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ``இந்த 2.38 லட்சம் ஏடிஎம்-கள் பழைய ரூபாய் நோட்டை வைப்பதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டவையாக இருக்கின்றன. இதில், தற்போதுள்ள புதிய நோட்டுகளை வைப்பதற்கு சிரமமாக உள்ளது. இதற்காக, புதிய மென்பொருள் கொண்ட இயந்திரங்களைத்தான் வைக்க வேண்டும். 

இந்தப் புதிய மாற்றங்களை மேற்கொள்ள, குறைந்தது 2,500 கோடி ரூபாய் தேவைப்படும். ஏற்கெனவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏடிஎம்-களின் மென்பொருள்கள் மாற்றியமைக்கப்பட்டதில் ஏற்பட்ட இழப்புகளிலிருந்து நிறுவனங்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இப்படிப்பட்ட நிலையில், புதிய மென்பொருள் கொண்ட ஏடிஎம்-களை நிறுவுவது என்பது பெரும் சிரமம். இதனாலேயே ஏடிஎம்-களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் மே மாதத்துக்குள், இந்தியாவில் உள்ள 50 சதவிகித ஏடிஎம்-களை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது" என வங்கிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த சில அதிகாரிகள் தெரிவித்தாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், `நகர்ப்புற பகுதிகளைத் தவிர்த்து, பிற பகுதிகளில் உள்ள ஏடிஎம்-களே அதிக அளவு மூடப்படும்' என்றும் தெரிவித்துள்ளது. அதேநேரம், மக்களை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நோக்கி இழுக்கும் பொருட்டே இந்த நடவடிக்கை' எனப் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க