`ரூ.15,000 கோடி நிவாரண நிதி வேண்டும்!' - `30 நிமிடத்தில் முடிந்தது பிரதமர்-முதல்வர் சந்திப்பு | cm edappadi palanisami summits reports of gaja storm to pm modi

வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (22/11/2018)

கடைசி தொடர்பு:11:21 (22/11/2018)

`ரூ.15,000 கோடி நிவாரண நிதி வேண்டும்!' - `30 நிமிடத்தில் முடிந்தது பிரதமர்-முதல்வர் சந்திப்பு

கஜா புயல் சேத விவரங்களைத் தெரிவிப்பதற்காக, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 30 நிமிடம் நடந்த இந்தச் சந்திப்பில், 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் கேட்டுள்ளார்.

முதல்வர் - பிரதமர் மோடி

கஜா புயல், கடந்த 16-ம் தேதி நள்ளிரவு அதிராம்பட்டினத்தில் கரையைக் கடந்தது. எட்டு மாவட்டங்களில் கடும் சேதத்தை கஜா புயல் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. புயல் முடிந்து 6 நாள்களாகியும் அதிலிருந்து அந்த மக்களால் மீண்டு வர முடியவில்லை. தொண்டு நிறுவனங்கள், தனி மனிதர்கள், அரசாங்கத்தின் உதவிகள் தொடர்ந்து அனுப்பட்டுக்கொண்டிருக்கின்றன.  இதற்கிடையே, புயல் சேதங்களை நேற்று முன்தினம் ஹெலிகாப்டரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். மொத்தம் இரண்டு மாவட்டங்களைப் பார்வையிட்டார் முதல்வர். இதனிடையே, புயல் சேதம்குறித்த அறிக்கையைப் பிரதமரிடம் சமர்ப்பித்து நிவாரண நிதி கோருவதற்காக, பிரதமரை சந்திக்க இன்று டெல்லி புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அதன்படி, இன்று காலை 9.45 மணியளவில் பிரதமரின் இல்லத்தில் மோடியைச் சந்தித்த முதல்வர், 30 நிமிடம் பேசினார். அப்போது, புயலால் ஏற்பட்ட சேதங்களை விளக்கியவர், புயல் பாதிப்பை ஆய்வுசெய்ய மத்தியக்குழுவை அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல, புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடியும், இடைக்கால நிவாரணமாக ரூ.1,500 கோடியும் பிரதமரிடம் முதல்வர் கேட்கப்பட்டதாகவும், வர்தா, ஒகி புயல் நிவாரணத்தொகையில் உள்ள நிலுவையையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, புயல் சேத அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி, மத்திய படைகளை தமிழகத்துக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. 

பிரதமரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ``கஜா புயல் சேதங்கள்குறித்து விரிவாக பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். இடைக்கால நிவாரணமாக ரூ.1,500 கோடி பிரதமரிடம் கோரியுள்ளேன். நிரந்தர சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.15 ஆயிரம் கோடி கேட்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, மத்திய படைகளை அனுப்புவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார். 85,000 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்களை அந்தந்த மாவட்டத்தில் தங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளேன். இதுவரை 12 மாவட்டங்கள் கஜா புயலுக்கு பாதிப்படைந்துள்ளன. மொத்தம் 63 பேர் உயிரை இழந்துள்ளனர்.  சீரமைப்புப் பணிகளுக்காக முதல்கட்டமாக ரூ.1000 கோடி விடுவிக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன" என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க