தொடர் கனமழையிலும் பள்ளிகள் திறப்பு! - கலெக்டர் உத்தரவை மீறிய தனியார் பள்ளிகள் | Private schools violating collector orders

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (22/11/2018)

கடைசி தொடர்பு:13:00 (22/11/2018)

தொடர் கனமழையிலும் பள்ளிகள் திறப்பு! - கலெக்டர் உத்தரவை மீறிய தனியார் பள்ளிகள்

வேலூர் மாவட்டத்தில், மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், கலெக்டரின் இந்த உத்தரவை மீறி பெரும்பாலான தனியார் பள்ளிகள் வகுப்புகள் நடத்தின.

 மழை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில், நேற்று காலை மழை பெய்ய தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்றைக்கும் மழை நீடிக்கிறது. வேலூர், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, காவேரிப்பாக்கம் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. சேறும் சகதியுமாக குடியிருப்புகள் காட்சியளிக்கின்றன. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தொடர் மழை காரணமாக, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனாலும், பெரும்பாலான மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி, ப்ளஸ் டூ மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. கலெக்டரின் ‘விடுமுறை அறிவிப்பு' குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். ஆனாலும், எஸ்.எம்.எஸ் மூலமாக மாணவ மாணவிகளைப் பள்ளிகளுக்கு வரவழைத்து, தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தியுள்ளன.

எஸ்.எம்.எஸ் பார்த்த மாணவ மாணவிகள், சிரமப்பட்டு மழையில் நனைந்தபடியே அவசர அவசரமாக பள்ளிகளுக்குச் சென்றனர். கலெக்டரின் உத்தரவை மீறிய தனியார் பள்ளிகள்மீது நடவடிக்கை பாயுமா என்பது பின்னர் தெரியவரும். வேலூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி, மழை அளவு விவரம் மில்லி மீட்டரில், ‘‘வேலூர்-36.4, ஆம்பூர்-22.4., வாணியம்பாடி-19.2, ஆலங்காயம்-12.4, அரக்கோணம்-32, காவேரிப்பாக்கம்-25.4, வாலாஜா-17.2, சோளிங்கர்-20.4, ஆற்காடு-27.8, குடியாத்தம்-13.2, மேல் ஆலத்தூர்-18.6, பொன்னை அணை-26.4, காட்பாடி ரயில்வே பகுதி-50.