`என் மனம் அழுது துடிக்குதும்மா!' - ஆறுதல் கூறிய மனைவி; உயிரை மாய்த்த தென்னை விவசாயி | Coconut farmer committed suicide after gaja storm near Orathanadu

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (22/11/2018)

கடைசி தொடர்பு:12:45 (22/11/2018)

`என் மனம் அழுது துடிக்குதும்மா!' - ஆறுதல் கூறிய மனைவி; உயிரை மாய்த்த தென்னை விவசாயி

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பில் தென்னை மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்த  விரக்தியில், தஞ்சாவூரில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாய்ந்த தென்னை மரங்கள்

ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன்குடிகாட்டைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள். இவருக்கு 5 ஏக்கர் அளவில் தொன்னந்தோப்பு உள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் இருந்துள்ளன.  அவை அனைத்தும் கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பில் வேரோடு சாய்ந்துவிட்டன. இந்தப் பாதிப்பினால் அவர் ரொம்பவும் சோகமாக இருந்துள்ளார். அவரின் தோப்பிலேயே, விழுந்துகிடக்கும் தென்னை மரங்களைப் பார்த்தபடி நீண்ட நேரம் நேற்று அமர்ந்திருந்திருக்கிறார்.

தற்கொலை செய்துகொண்ட விவசாயி ``என்னங்க இப்படியே இடிந்துபோய் இருக்கீங்க'' எனத் தேற்றிய அவர் மனைவி அம்சவள்ளியிடம், ``நான், நம் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டதைவிட தென்னம் பிள்ளைகளைத்தான் பார்த்துக் கொண்டேன். அவை நம்மைத் தவிக்க விட்டுவிட்டு வேரோடு சாய்ந்துகிடப்பதைப் பார்க்கையில் என் மனம் அழுது துடிக்கிறது'' எனச் சோகமாகக் கூறியிருக்கிறார். அவருக்கு மனைவி ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும் உறவினர்களிடம், `இப்பதான் கடன் வாங்கி என் மகளுக்குத் திருமணம் செய்துவைத்தேன். அந்த கடனில் இருந்து மீள்வதற்காக போதிய வருமானம் இல்லாததால், கடன் வாங்கி மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்துள்ளேன். அவன் சமீபத்தில்தான் ஊருக்கு வந்திருக்கினான். இந்தக் கடன்கள் எல்லாம் அடைப்பதற்கு தென்னை மரங்களை நம்பிதான் இருந்தேன். இந்த நிலையில் அவை வேரோடு சாய்ந்து எனக்கு இவ்வளவு சோகத்தைத் தரும் எனக் கனவில்கூட நினைக்கவில்லை. கடன்  தீர்வதற்குள் என்னை கவலையில் ஆழ்த்திச் சென்றுவிட்டன தென்னை மரங்கள். இயற்கை எந்தவித  இரக்கமுமில்லாமல் எதையும் மிச்சம் வைக்காமல் அள்ளிக்கொண்டு சென்றுவிட்டது. இனி எதிர் காலத்துக்கு என்ன செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை' எனப் புலம்பியுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை சுந்தர்ராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். தென்னை விவசாயி தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க