வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (22/11/2018)

கடைசி தொடர்பு:14:45 (22/11/2018)

`சென்னையில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைவு' - வானிலை மையம்

'சென்னையில், வழக்கத்தைவிட தற்போது 45 சதவிகிதம் குறைவாக மழை பெய்துள்ளது' என வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். 

பாலசந்திரன்

கஜா பாதிப்புகளில் இருந்து மீள்வதற்குள் தமிழகத்தில் கனமழை வெளுத்துவாங்குகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற கடலோர மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையைப் போல, தமிழகத்தின் உள் மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்துவருகிறது. ஏற்கெனவே, கஜா புயல் பாதிப்புகளில் இருந்து மீளாத இம்மக்கள், இந்த மழையால் நிவாரணப் பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது என வேதனை தெரிவித்துள்ளனர். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் ஐந்து மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கும், மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதேபோல, சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், மழை  நிலவரம்குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ``நேற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழக கடற்கரைப் பகுதிகளில் நிலவிவந்த வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவிழந்துள்ளது. தொடர்ந்து, காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக தமிழகத்தின் உள்பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது, வடமேற்குத் திசையில் நகர்ந்து வலுவிழக்கக் கூடும். அடுத்த 24 மணி நேரத்துக்கு வட மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற பகுதிகளில் கனமழை பெய்யும். சென்னையில், இடைவெளி விட்டு மழை பெய்யும். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை. சென்னையைப் பொறுத்தவரை வழக்கத்தைவிட தற்போது 45 சதவிகிதம் குறைவாக மழை பெய்துள்ளது" என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க