வெளியிடப்பட்ட நேரம்: 14:31 (22/11/2018)

கடைசி தொடர்பு:14:31 (22/11/2018)

புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது ஏன்? - எடப்பாடி பழனிசாமி கொடுத்த விளக்கம்

கஜா புயல் தமிழகத்தில் பயங்கரமாகத் தாக்கியது. இதில், டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சேதங்களின் அறிக்கையை இன்று, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்து வழங்கியதுடன், ரூ.15,000 கோடி நிவாரண நிதி கோரினார்.

எடப்பாடி - மோடி

30 நிமிடங்களுக்கு நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ``பிரதமரிடம் தமிழக அரசு சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ரூ 15,000 கோடி  நிரந்தர சீரமைப்பிற்காக மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். தற்காலிக சீரமைப்பிற்காக ரூ1,500 கோடி கேட்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, மத்தியக் குழுவை புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்காக அனுப்பவதாக பிரதமர் தெரிவித்தார். தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும், எதிர்பார்த்ததைவிட பயங்கரமாக புயல் தாக்கியுள்ளது'' எனத் தெரிவித்தார் முதலமைச்சர்.

பின், புயலில் சேதமடைந்த அசையும், அசையாப் பொருள்களுக்கான நிவாரணத் தொகை எவ்வளவு என்பது குறித்துத் தெரிவித்த எடப்பாடி, தற்போதைய கஜா புயல் நிவாரணத்தொகையை தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட நிஷா புயலுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகையோடு ஒப்பீடுசெய்து பேசினார். ``2008ல் தி.மு.க ஆட்சியில் நிஷா புயல் வந்தபோது, உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், இறந்த கால்நடைகளுக்கு  10,000 ரூபாய்தான் கொடுத்தார்கள். இந்த ஒப்பீடுகளைப் பார்த்தாலே அ.தி.மு.க ஆட்சியில் கொடுத்த நிவாரணத் தொகை எவ்வளவு அதிகம் என்று தெரியும். எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே நிவாரணத் தொகையைக் குறைத்துக் கூறிவருகின்றன. 

மனிதாபிமான அடிப்படையில் இந்த அரசு அதிகபட்ச நிவாரணத்தொகையை வழங்குகிறது. தி.மு.க அளித்த நிவாரணத் தொகையைவிட அ.தி.மு.க அரசு வழங்குவது அதிகம்" என்றார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், மக்கள் துயரத்தில் இருக்கும்போது சாலை மார்க்கமாகச் செல்லாமல், ஏன் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டீர்கள் எனக் கேட்டனர். அதற்கு, ``சாலை மார்க்கமாகச் சென்ற ஸ்டாலின் எத்தனை இடங்களைப் பார்வையிட்டார். நான்கு மாவட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலை வழியாகச் சென்றால் அதை எப்படி முழுமையாகப் பார்வையிட முடியும். ஹெலிகாப்டரில் தாழ்வாகப் பறந்து, ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு மரங்கள் சாய்ந்தன, சேதங்கள் எவ்வளவு என்பதை முழுவதுமாகப் பார்வையிட்டோம். ஹெலிகாப்டரில் சென்று சேதங்களைப் பார்வையிட்டு, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையெல்லாம் பிரதமரிடம் வழங்கியுள்ளோம். ஸ்டாலின் சென்று எந்த இடத்தில் புகைப்படம் எடுத்து வந்தார் சொல்லுங்கள் பார்ப்போம். 

''நான் 9 முறை ஒரே தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனக்கு மக்களின் உணர்வுகள் நன்றாகத் தெரியும். மக்களின் உணர்வுகளை உணர்ந்த காரணத்தால்தான் இதுவரை எந்த அரசாங்கமும் செய்யாத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயலுக்கு முன்பாகவே மக்களை முகாம்களில் தங்கவைத்தேன். எல்லா அமைச்சர்களையும் அந்தந்த மாவட்டங்களில் தங்கிப் பணிபுரியச் சொன்னேன் ''என்று கூறினார். மேலும், அரசு ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  மின் ஊழியர்கள், வயல் பகுதிகளிலெல்லாம் மின்கம்பங்களைத் தோளில் சுமந்துசென்றுள்ளனர். மின்சாரம் வழங்குவதற்கு உரிய நேரம் தேவைப்படுகிறது. அதனால் அவர்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க