``கஜா இழப்புல இருந்து வெளிவர எத்தனை வருஷம் ஆகுமோ!'' - விவசாயி மணிவண்ணன் | Nagapattinam is the first victim of every natural calamity

வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (22/11/2018)

கடைசி தொடர்பு:17:55 (22/11/2018)

``கஜா இழப்புல இருந்து வெளிவர எத்தனை வருஷம் ஆகுமோ!'' - விவசாயி மணிவண்ணன்

"பல வருஷமா பாதுகாத்துவந்த தென்னை மரங்கள் உட்பட, குடும்பத்துல ஒருத்தரா வளர்க்கப்பட்ட ஆடு, கோழி, காடு கழனியில இருந்துவந்த மான் மாதிரியான உயிரினம், விவசாயத்துக்கும் வியாபாரத்துக்கும் உறுதுணையா இருந்த எங்க மாடுங்கனு எல்லா உயிர்களையும் இழுத்துக்கிட்டுப் போனதோடு, எங்களையும் சேர்த்து இழுத்துக்கிட்டுப் போயிருக்கலாம் இந்தப் புயல்."

``கஜா இழப்புல இருந்து வெளிவர எத்தனை வருஷம் ஆகுமோ!'' - விவசாயி மணிவண்ணன்

சுழன்று அடித்த காற்றால் வெகுண்டெழுந்த மேகக்கூட்டம் வழியே தன் காட்டத்தைக் காட்சிகளாகப் பதித்துவிட்டுச் சென்றுவிட்டது, கஜா புயல். இதன் கோரத்தாண்டவத்தால், விவசாயப் பெருமக்களின் நாளைய வாழ்க்கை என்று சொல்வதைவிட, இன்றைய பொழுது எப்படி இருக்கப்போகிறது என்பதே கேள்விக்குறியாக உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற பகுதிகளையே தனக்கான ஆடுகளமாக நினைத்து, தன் ஆவேசத்தை அப்பாவிகளான விவசாயிகள் மீது காட்டியிருப்பதைப் பார்க்கும்போது மனம் கனத்துவிடுகிறது.

நாகை மாவட்டம் சிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பனைமேடு கிராமத்தில் வசிக்கும் விவசாயி மணிவண்ணன், தன் ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தார். ``வெளியே என்னமோ இப்ப குளுகுளுன்னு இருக்கு. ஆனா, எங்க மனசும் வயிறும் எரியுற அனலை, உங்ககிட்ட பேசுறதுனாலல்லாம் குளிரவைக்க முடியாது. எங்க வாழிடமான நாகை மாவட்டம்தான் இயற்கைப் பேரிடராகப் பாதிக்கப்படுற முதல் மாவட்டம். ஒவ்வொரு வருஷமும் இந்தப் புயலால் படுற பாடு... நாங்க இதுவரைக்கும் தற்கொலை பண்ணிக்காததுதான் மிச்சம். ஆனா, இப்ப அதையும் செஞ்சுக்குவோம்போல.

`அதான் ஒவ்வொரு வருஷமும் புயல் உங்களைப் புரட்டிப்போடுதே... கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கலாமே'ன்னு நீங்க கேட்கலாம்... எங்க வயித்துப்பாட்டுக்கே வயலை நம்பிதான் இருக்கோம். இந்தச் சூழ்நிலையில எங்கேயிருந்து எச்சரிக்கையா இருக்கிறது? உடம்புல இருக்கும் உயிரைக் காப்பாத்திக்கவே எங்களுக்கு நாதியில்லை... அப்புறம் எப்படி..? இதெல்லாம் பேசவேணும்னா ஈஸியா இருக்கலாம். இங்கே இருந்து பார்த்தாதான் தெரியும், வலியும் வேதனையும்.

கஜா புயல்

எங்களுக்கான துயரைத் துடைத்தெறிய அரசோ, பொதுநல அமைப்போ எங்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யலை. அறிவிப்போடு நிக்குது. 1977-ம் வருஷம் இப்படி ஒரு புயல் வீசியதா எனக்கு ஞாபகம். அதுக்கு அப்புறம், அதே மாதிரியான பாதிப்பு இப்ப ஏற்பட்டிருக்கு. அப்போ ஏற்பட்ட பாதிப்புகளைவிடவும் இழப்புகளைவிடவும் கஜா புயலால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எத்தனை வருஷம் ஆவுமோ தெரியலை. மணிக்கு 165 கி.மீ வேகத்துல வீசியதாவும், எங்க பகுதியிலதான் 85 சதவிகித அளவுக்குமேல் பாதிப்புன்னும் செய்தியில சொன்னாங்க. இங்கே இருக்கிற பாதிப்புகளைப் பார்த்தா அதுக்கும்மேல இருக்கும்.

கடந்த ஆறு நாளா மின்வசதியோ, பசிக்கு உணவோ, உடுத்த உடையோ இப்படி எந்தவிதமான அடிப்படைத் தேவைக்கும் வழியில்லாம வாய்க்கும் வயித்துக்கும் எங்க உயிர் ஊசலாடிக்கிட்டிருக்கு. குழந்தைங்க, பொம்பளைங்க, பெரியவங்க, என்னை மாதிரி முதியவங்கனு எல்லாருமே செய்வதறியாது திண்டாடிக்கிட்டிருக்கோம். அதுலயும் நோய்வாய்ப்பட்ட முதியவங்க, உடல் ஊனமுற்றோரின் நிலை ரொம்பவே பரிதாபம். நாகை மாவட்டம் மட்டுமல்லாம, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்லயும் பெருத்த பாதிப்ப ஏற்பட்டிருக்கிறதனால, எங்க வாழ்க்கை இப்போதைக்கு எங்ககிட்ட இல்லைன்னுதான் சொல்லணும். 

புயலோ, சூறாவளியோ, நில அதிர்வோ எதுவானாலும், இயற்கைப் பேரிடரால அதிகம் பாதிக்கப்படுறது இந்த மாவட்டம்தான். விழுந்தமாவடி புதுப்பள்ளிப் பக்கத்துல இருக்கிற கிராமத்துல பார்த்தீங்கன்னா, பல வருஷமா பாதுகாத்துவந்த தென்னை மரங்கள் உட்பட, குடும்பத்துல ஒருத்தரா வளர்க்கப்பட்ட ஆடு, கோழி, காடு கழனியில இருந்துவந்த மான் மாதிரியான உயிரினம், விவசாயத்துக்கும் வியாபாரத்துக்கும் உறுதுணையா இருந்த எங்க மாடுங்கனு எல்லா உயிர்களையும் இழுத்துக்கிட்டுப் போனதோடு, எங்களையும் சேர்த்து இழுத்துக்கிட்டுப் போயிருக்கலாம் இந்தப் புயல். அது ஆடின கோரத்தாண்டவத்தைப் பார்க்கத்தான் இயற்கை எங்களையெல்லாம் விட்டுவெச்சிருக்குன்னா, இந்த உயிரே எங்களுக்குத் தேவையில்லை'' என்று தன் ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தார் விவசாயி மணிவண்ணன்.

நாற்பது, ஐம்பது வருட பாரம்பர்ய மரங்கள், பயிர்கள், மரங்கள், செடிகொடிகள்தான் வாழ்க்கையே என நம்பி இருந்த விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய அத்தனை வளங்களையும் அழித்துச் சென்றுவிட்டது கஜா புயல். இந்தப் பெரும்துயரிலிருந்து மக்கள் வெளிவர, எத்தனை ஆண்டுகள் ஆகுமோ!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்