இலங்கைக்கு கடத்த முயன்ற 980 கிலோ களைக்கொல்லி! - சுங்கத்துறை அதிரடி பறிமுதல் | 980 kg of herbicide powder seized by customs in thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (22/11/2018)

கடைசி தொடர்பு:15:20 (22/11/2018)

இலங்கைக்கு கடத்த முயன்ற 980 கிலோ களைக்கொல்லி! - சுங்கத்துறை அதிரடி பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 980 கிலோ களைக்கொல்லியை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

சுங்கத்துறை பறிமுதல் செய்த  களைக்கொல்லி

தூத்துக்குடி கடலோரப் பகுதியலிருந்து  இலங்கைக்கு சட்டவிரோதமாக சில பொருள்கள் கடத்தல் செய்யப்பட உள்ளதாக சுங்கத்துறை தடுப்புப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் தருவைக்குளம் அருகில் உள்ள தெற்கு கல்மேடு என்ற கடற்கரைப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

அப்பகுதியில் கடற்கரைக்கு ஒதுக்குப் புறமான பகுதியில் வெள்ளை நிறத்தில் சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதைப் பிரித்துப் பார்த்தபோது அதில் பவுடர் போன்று பாக்கெட்டுகள் இருப்பதைக் கண்டனர். அதில் மொத்தம் 30 பண்டல்களில் 980 கிலோ எடையுள்ள பாக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பறிமுதல் செய்யப்பட்ட களைக்கொல்லி

அவற்றை சுங்கத்துறை ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ததில், விவசாய விளை நிலங்களில் வளரும் களைகளைக் கட்டுப்படுத்த தெளிக்கப்படும் களைக்கொல்லி என்பது தெரிந்தது. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சத்து 7 ஆயிரம் ஆகும். இதுபோன்ற களைக்கொல்லிகளின் விலை இலங்கையில் அதிகமாக உள்ளதாலும், இதன் தேவை அங்கு அதிகம் இருப்பதாலும், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள உரம் மற்றும் பூச்சி மருந்துக்கடைகளிலிருந்து இதுபோன்ற களைக்கொல்லி பவுடர் பாக்கெட்டுகள்  சேகரிக்கப்பட்டு அவை, படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்திச்  செல்லப்பட்டு வருவதையும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்ததாக கூறினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க