நெல்லையில் பரவும் பன்றிக்காய்ச்சல்! - பள்ளி நிர்வாகி உயிரிழந்த பரிதாபம் | a school executive was died of swine flu in nellai

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (22/11/2018)

கடைசி தொடர்பு:15:45 (22/11/2018)

நெல்லையில் பரவும் பன்றிக்காய்ச்சல்! - பள்ளி நிர்வாகி உயிரிழந்த பரிதாபம்

நெல்லையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதுடன், உயிரிழப்புக்கள் தொடர்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பன்றிக்காய்ச்சலுக்கு இன்று பள்ளி நிர்வாகி சிகிச்சை பலனின்றி பலியானார். 

பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அவற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறையும் மாவட்ட நிர்வாகமும் தீவிரம் காட்டிவருகின்றன. ஆனாலும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாததால் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. 

நெல்லை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்காக அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கூடுதல் நோயாளிகளைத் தங்க வைக்க இடவசதி இல்லாததால் தீவிர காய்ச்சல் உள்ளவர்கள் மட்டுமே வார்டுகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். இது தவிர மாநகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலவன்

நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கோயிலூத்து கிராமத்தைச் சேர்ந்த வேலவன் என்பவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பூலாங்குளம் கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியின் தாளாளராக செயல்பட்டு வந்த அவர் காய்ச்சலுக்காக ஆலங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த இரு தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். நெல்லையில் பரவிவரும் பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.