பொன்.ராதாகிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்ட கேரள போலீஸ்! | Sabarimala issue - kerala police apologise to pon radhakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (22/11/2018)

கடைசி தொடர்பு:16:05 (22/11/2018)

பொன்.ராதாகிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்ட கேரள போலீஸ்!

சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சென்ற காரை சோதித்ததற்கு மன்னிப்புக் கேட்ட காவல்துறையினர், அதுகுறித்து விளக்கக் கடிதமும் கொடுத்தனர்.

பொன் ராதாகிருஷ்ணன்

சபரிமலைக்குச் சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை பத்தணம்திட்டா எஸ்.பி யதீஷ் சந்திரா தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தனியார் வாகனங்களை ஏன் பம்பையில் அனுமதிக்கவில்லை எனக் கேட்டதற்கு, `நீங்கள் போக்குவரத்துப் பொறுப்பை ஏற்றுக்கொள்வீர்களா’ எனக் குரலை உயர்த்தி கேள்விகேட்டார். கேரள அமைச்சர் ஒருவரிடமாவது நீங்கள் இப்படி குரலை உயர்த்தி கேள்வி கேட்க முடியுமா என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மேலும் சபரிமலை சந்நிதானத்தில் நேற்று இரவு சரணகோஷம் எழுப்பியதுடன் பஜனையிலும் ஈடுபட்டார் பொன்.ராதாகிருஷ்ணன். சபரிமலை சந்நிதானத்தில் ஐயப்ப சேவா சங்கத்தின் தற்காலிகப் பந்தலில் தரையில் படுத்து உறங்கிய பொன்.ராதாகிருஷ்ணன் அதிகாலையில் மலையில் இருந்து கீழே இறங்கினார்.

சபரிமலை சன்னிதானத்தில் ஐயப்ப சேவா சங்கத்தின் தற்காலி பந்தலில் தரையில் படுத்து உறங்கிய பொன்.ராதாகிருஷ்ணன்

பம்பையில் இருந்து பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடன் சென்றவர்கள் கார்களில் புறப்பட்டனர். அப்போது பொன்.ராதாகிருஷ்ணனுடன் வந்த காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பொன்.ராதாகிருஷ்ணன் காரில் இருந்து இறங்கி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சபரிமலையில் பிரச்னை செய்தவர்கள் காரில் இருக்கிறார்களா எனச் சோதனை செய்ததாகக் காவல்துறையினர் கூறினர். பொன்.ராதாகிருஷ்ணனை பம்பை எஸ்.பி ஹரி சந்திரன் தடுத்து நிறுத்தியதாக பா.ஜ.க-வினர் பிரச்னை செய்தனர். இதையத்து காவல்துறையினர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டனர். மேலும், 'ஏற்கெனவே சபரிமலையில் பிரச்னை செய்ததாக நாங்கள் தேடும் சிலர் காரில் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால் காரை சோதனை செய்தோம்' என விளக்கம் கொடுத்தனர். இதுசம்பந்தமாக விளக்கக் கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கொடுத்தனர். இந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்த கேரள காவல்துறையைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது.