வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (22/11/2018)

கடைசி தொடர்பு:17:40 (22/11/2018)

கரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு!

டெல்டா மாவட்டத்தைப் புரட்டிப் போட்டுள்ள கஜா புயல் கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தையும் பாதித்துள்ளது. கடவூர் பகுதிகளில் கஜா புயலால் பாதித்துள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டார்.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள மாவத்தூர், பாலவிடுதி, குரும்பபட்டி, தலிவாசல், ஆலந்தூர், புங்கம்பாடி போன்ற இடங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பார்வையிட்டு நிவாரணப்பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ``கரூர் மாவட்டம் முழுவதும் கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகள் முழுவதிலும், நிவாரணப் பணிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட பணியாளர்கள் தங்கள் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சாலைகள், வீடுகள் மீது விழுந்த மரங்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. கடவூர் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மரவள்ளி, வாழை, வெற்றிலைக்கொடி, பாகை, புடலை போன்ற பயிர்கள் 90 ஹெக்டேர் அளவில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 673 வீடுகள் பாதிப்படைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மின்கம்பங்களைச் சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்துறை, மின்சார வாரியத்துறை சார்ந்த அனைத்துத்துறை அலுவலர்களும் வேகமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணி முடிவடைந்து அதன் விவரம் அரசுக்கு அனுப்பப்பட்டு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.