`இழப்பீடு எப்போதான் சார் கிடைக்கும்?’ - காத்திருப்புப் போராட்டத்தில் ராமநாதபுரம் விவசாயிகள் | Ramanathapuram farmers staged protest over crop insurance

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (22/11/2018)

கடைசி தொடர்பு:18:00 (22/11/2018)

`இழப்பீடு எப்போதான் சார் கிடைக்கும்?’ - காத்திருப்புப் போராட்டத்தில் ராமநாதபுரம் விவசாயிகள்

வறட்சியால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீட்டு தொகை மற்றும் இழப்பீட்டு தொகையை வழங்கக் கோரி ராமநாதபுரத்தில் விவசாய சங்கத்தினர் காத்திருக்கும்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இவர்களது பாதிப்பை ஈடு செய்யும் வகையில் பாரதப் பிரதமரின் வேளாண் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட சுமார் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 466 விவசாயிகள் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரியிருந்தனர். 

இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டம், நடைப்பயணம், அமைச்சரிடம் முறையீடு என பல வகையிலும் போராட்டம் நடத்தியும் பலன் ஏதும் இல்லை. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்தினர். இதன் பின்னரும் இழப்பீடு வழங்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பெருமாள், மயில்வாகனன், முத்துராமு, கல்யாணசுந்தரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.