வெளியிடப்பட்ட நேரம்: 16:16 (22/11/2018)

கடைசி தொடர்பு:16:29 (22/11/2018)

இந்தியில் கேள்வி எழுப்பிய திருப்பத்தூர் விவசாயி! - ஆளுநர் அளித்த நம்பிக்கை பதில்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம், திருப்பத்தூர் விவசாயி ஒருவர், தங்களின் நிலை குறித்து இந்தியில் பேசியது அங்கிருந்தவர்களை வியப்படைய வைத்தது.

நாகையில் ஆளிநர் ஆய்வு

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் கடந்த 6 நாள்களாக உணவு, குடிநீர் மற்றும் மின்சாரமின்றி மக்கள் தவித்து வருகின்றனர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று நாகப்பட்டினம் முதல் வேதாரண்யம் வரை பல கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார். சில இடங்களில் காரில் அமர்ந்தபடியே ஆய்வு செய்த ஆளுநர், சில இடங்களில் மட்டுமே இறங்கிச் சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். நாகை மகாராஜபுரம் பகுதியில் மக்களிடம் குறைகளைக் கேட்ட தமிழக ஆளுநர் குடிநீர், உணவு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா, வேறு என்னென்ன வசதிகள் உங்களுக்கு ஏற்படுத்தித்தர வேண்டும் என்று கேட்டறிந்தார்.

வேளாங்கண்ணி அருகே வெள்ளப்பள்ளம், கச்சைவெளி, கள்ளிமேடு உள்ளிட்ட கிராமங்களை ஆய்வு செய்த தமிழக ஆளுநர் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு தார்பாலின் வழங்கினார். மேலும், நாகப்பட்டினம் மாவட்டம் புஷ்பவனம் ஊராட்சியில் அரசு ஏற்படுத்தியிருக்கும் மருத்துவ முகாமைப் பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநர் உதவி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம், தலைஞாயிறு உள்ளிட்ட மூன்று இடங்களில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்படும் உணவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த இடங்களைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் ஆகியோருடன் ஆய்வுசெய்து உணவு தரமான முறையில் தயாரித்து மக்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

ஆளுநருடன் இந்தியில் பேசிய திருப்பத்தூர் விவசாயி

2-வது நாளான இன்று திருவாரூர் மாவட்டத்தில் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார். திருப்பத்தூரில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநரிடம் விவசாயி தங்கவேலு இந்தியில் பேசினார். அதன் தமிழாக்கம், ``திருத்துறைபூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் புயல் காற்றினால் மின்கம்பங்களும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஏழு நாள்கள் ஆகியும் இதுவரை எந்தவித அதிகாரிகளும் வந்து பார்த்து ஆறுதல் கூறவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களுக்கு உணவு, மின்சாரம், நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார். இதற்கு இந்தியில் பதில் அளித்த ஆளுநர், ஓரிரு நாள்களில் சரி செய்யப்படும். உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்க அரசு நடவடிக்கை  எடுக்கும்" என்று நம்பிக்கையுடன் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க