வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (22/11/2018)

கடைசி தொடர்பு:19:40 (22/11/2018)

மக்களின் கோரிக்கைக்கு உடனடி தீர்வுகண்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புதிய பேருந்து வழித்தடங்களைத் தொடங்கி வைத்தார்.

புதிய பேருந்து வசதியை திறந்துவைத்த எம் ஆர் விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் புதிய பேருந்து வழித்தடங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர், ``மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, `எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வந்தார். அதனடிப்படையில் செயல்பட்டு வரும் தமிழக அரசு பொதுமக்களின் கோரிக்கைகள் மீது மிகுந்த கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது.

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. பெறப்பட்ட மனுக்களின் கோரிக்கையை ஏற்று பரமத்தி வடக்கு ஒன்றியம், பழமாபுரம் பகுதியில், கரூர்பழமாபுரம் (வழி) மண்மங்கலம், வேலாயுதம்பாளையம், டி.என்.பி.எல், மூலிமங்கலம் வழித்தடம், பரமத்தி தெற்கு ஒன்றியம், எம்.ஜி.ஆர்.நகர், சின்னதாராபுரம் பகுதியில், பள்ளபட்டி - வேலூர் (வழி), அரவக்குறிச்சி, அரிக்கதாரன்வலசு, ஒத்தமாந்துறை, சின்ன தாராபுரம், ஆரியூர், பரமத்தி வழித்தடம், அரவக்குறிச்சி ஒன்றியம், கே.வெங்கிடாபுரம் பகுதியில், பள்ளபட்டி - மார்க்கம்பட்டி (வழி) தலையாரிப்பட்டி, இனுங்கனூர், குமாரபாளையம், கே.வெங்கிடாபுரம், நவாமரத்துப்பட்டி வழித்தடம் ஆகிய 3 புதிய வழித்தடங்கள் பொதுமக்கள் பயன்படும் வகையிலும், பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதிலுமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் அவசியம், அத்தியாவசியம் தேவைகளுக்காகப் பேருந்து வசதி கோரும் கிராமங்களுக்கு படிப்படியாகப் புதிய வழித்தடங்களை அமைத்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.