வெளியிடப்பட்ட நேரம்: 16:33 (22/11/2018)

கடைசி தொடர்பு:17:43 (22/11/2018)

`உத்தரவு போட்டால், பொறுப்பு கொடுக்கணுமா?’ - ரேஷன் கடைகளை ஆட்டுவிக்கும் அ.தி.மு.க அதிகாரிகள்

ணிமாற்ற உத்தரவு வந்தும் பணியில் சேராமல் தவிக்கிறார் ரேஷன் கடைப் பெண் பணியாளர் ஒருவர்.  `அதிகாரிகள் சிலர் அ.தி.மு.க-வில் இருப்பதால் பணியில் சேர விடாமல் தடுக்கின்றனர்' எனக் குற்றம் சாட்டுகின்றனர் ரேஷன் கடை ஊழியர்கள். 

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் பம்மல் பகுதியில் இருக்கும் நியாய விலைக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறார். தினமும் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து வந்து செல்வதற்குச் சிரமமமாக இருப்பதால், பணிமாற்றம் கோரி மேலாண்மை இயக்குநர் பாபுவுக்கு விண்ணப்பம் கொடுத்தார். அவரது சிரமத்தைப் புரிந்துகொண்டு, தாம்பரம் சுதர்சன் நகரில் உள்ள கடைக்கு மாற்றல் வழங்கப்பட்டது. இதையடுத்து, புதிய பணியிடத்தில் பொறுப்புகளை ஏற்கச் சென்ற சசிகலாவுக்கு அவமானமே மிஞ்சியுள்ளது. இதுதொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மேலாண்மை இயக்குநர் பாபுவுக்கு விரிவான மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

ரேசன் கடை பணிமாற்ற உத்தரவு

அதில், 'எனக்குப் பணிமாற்றம் செய்து தந்த உத்தரவின்படி, சுதர்சன் நகர் 1-ல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளச் சென்றேன். ஆனால், அங்கிருந்த விற்பனையாளர் ரமாமணி என்பவர் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டினார். `மேலாண்மை இயக்குநர் உத்தரவு போட்டால், உனக்கு பொறுப்புகளைத் தர வேண்டுமா?' எனக் கேட்டார். `இந்தக் கடைக்கு என்னுடைய சொந்த செலவில் தரை போட்டு சசிகலாபுதுப்பித்திருக்கிறேன். உன்னால் முடிந்ததைப் பார்' எனக் கூறிவிட்டு, 'பள்ளிக்கரணை கடைக்கே நீ போய் சேர். உன்னுடைய பணிமாற்றத்தை ரத்து செய்தே தீருவேன்' என எனக்கு அவர் உத்தரவு போட்டார். மீண்டும் அந்தக் கடையில் நான் விற்பனையாளராகப் பொறுப்பேற்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்' என வேதனையோடு குறிப்பிட்டிருந்தார். 

இந்தச் சம்பவம் குறித்துப் பேசும் கூட்டுறவு பண்டக சாலையின் விற்பனையாளர்கள், ``2014-ம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வருகிறார் சசிகலா. கணவரை இழந்த அவருக்கு வேலைவாய்ப்பு அலுவலம் மூலமாகத்தான் இந்த வேலை கிடைத்தது. பம்மலில் உள்ள ரேஷன் கடையில் வேலை பார்த்து வந்தார். அவரைப் பள்ளிக்கரணைப் பகுதிக்குப் பணிமாற்றம் செய்தனர். இதனை எதிர்பார்க்காதவர், ` காஞ்சிபுரத்தில் இருந்து வந்து செல்லவே சிரமமாக இருக்கிறது. வேறு கடைக்கு மாற்றுங்கள்' என மேலாண்மை இயக்குநரிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, தாம்பரத்துக்கு மாற்றல் உத்தரவு வழங்கினார் மேலாண்மை இயக்குநர். இந்த உத்தரவை எடுத்துக் கொண்டு சுதர்சன் நகர் கடைக்குச் சென்றவருக்குத்தான் இப்படியொரு அவலம் நடந்துள்ளது.

ரேஷன் கடைகளை கவனிக்கும் ஏரியா மேலாளர் கிருஷ்ணராஜ் என்பவர் அ.தி.மு.கவில் இருக்கிறார். இன்னொரு மேலாளரான வெங்கடேசன் என்பவர் அ.தி.மு.க யூனியனில் இருக்கிறார். இவர்கள் இருவரும் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. யார் எங்கு பணிபுரிய வேண்டும் என்பதையும் இவர்கள்தான் தீர்மானிக்கின்றனர். இவர்களுக்கு உதவியாக உயர் அதிகாரிகள் செயல்படுகின்றனர். அதனால்தான் சசிகலாவால் அந்த இடத்தில் பொறுப்பேற்க முடியவில்லை. கடந்த ஒரு மாதமாக வேலையும் இல்லாமல் சம்பளமும் இல்லாமல் தவித்து வருகிறார். இந்த விவகாரத்தில் மேலாண்மை இயக்குநர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்" என்கின்றனர். 

பெண் ஊழியருக்கு நடந்த கொடுமை குறித்து மேலாண்மை இயக்குநர் பாபுவிடம் பேசினோம். `` அவருக்குப் பணிமாற்றம் செய்து உத்தரவு வழங்கவிட்டோம். அந்த இடத்தில் இருக்கும் பெண்மணி, 'நான் வேறு இடத்துக்குச் செல்வதற்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும்' என்கிறார். சசிகலாவும், 'அந்தக் கடைதான் வேண்டும்' என்கிறார். தினமும் காஞ்சிபுரத்திலிருந்து வந்து செல்கிறார் சசிகலா. `அதே காஞ்சிபுரத்திலேயே அவருக்குக் கடை ஒதுக்கித் தருகிறோம்' எனக் கூறியிருக்கிறோம். இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கிறேன்" என்றார்.