வெளியிடப்பட்ட நேரம்: 20:02 (22/11/2018)

கடைசி தொடர்பு:20:02 (22/11/2018)

``கஜா புயலுக்காக உதவுபவர்களுக்கும், உதவி வேண்டுபவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்!" ஆசிரியை பிரீத்தி

"அரசாங்கம் முகாமைக் காலி பண்ணிட்டாங்கன்னா அவங்களுக்குக் கிடைக்கிற ஒருவேளை சாப்பாடுகூட கிடைக்காம போக வாய்ப்பிருக்கு. அதே மாதிரி பள்ளிகளைத் திறந்தால் நிலைமை மோசமாயிடும். ஏன்னா, பலர் ஸ்கூல்லதான் தங்கி இருக்காங்க."

ஜா புயலின் பாதிப்பு தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. கஜா புயலினால் பல கிராமங்களைச் சேர்ந்த மக்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாக மாறிவிட்டது. தன்னார்வலர்கள் பலர், அவர்களால் முடிந்த உதவியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். கும்பகோணம் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள மக்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் தன்னார்வலரும் ஆசிரியருமான பிரீத்தியைத் தொடர்புகொண்டு பேசினோம்.

"திருத்துறை பூண்டியிலிருந்து வேதாரண்யம் போகும் வழியில் சிறுதலைக்காடு, பஞ்சநதிக்குளம் எனக் கிட்டத்தட்ட நான்கு கிராமங்களுக்குச் சென்றிருந்தோம். அந்தக் கிராமங்களிலெல்லாம் இதுவரை எந்தவொரு உதவியும் கிடைத்தபாடில்லை. பஞ்சநதிக்குளம் என்கிற கிராமத்தில் நாங்க போகுற வரைக்குமே ஒரு வாகனமும் போகலை. அந்தப் பகுதிகளிலெல்லாம் உள்ளே போகுறதுக்குச் சின்ன பாதைகூட இல்லை. மரங்கள் விழுந்து, வழியை மறித்து கிடக்குது. இனிமே அந்தக் கிராமத்துக்கு உதவப் போறவங்களுக்கு சிரமம் இருக்காத வகையில் மரங்களை எல்லாம் அப்புறப்படுத்திட்டுப் போனோம். அப்பதான், அது வரைக்கும் அந்தப் பகுதி மக்களுக்கு எந்த உதவியுமே கிடைக்கலைன்னு தெரிஞ்சது. 

உதவிக்காக காத்திருக்கும் மக்கள்

அங்கே கிட்டத்தட்ட 250 குடும்பங்கள் இருக்காங்க. அந்தக் கிராமத்திலுள்ள பழைய வி.ஏ.ஓ மூலமா அரசாங்கம் முகாம் போட்டிருக்காங்க. அங்கே ஒருவேளை மட்டும்தான் அவங்களுக்கு சாப்பாடு கொடுக்குறாங்க. சாப்பாடுன்னா, அரிசி கஞ்சி மாதிரி தயார்செஞ்சு ஒரு பதினோரு, பன்னிரண்டு மணி போல ஊத்துறாங்க. அதைத்தான் அந்த மக்கள் சாப்பிட்டுப் பசியைப் போக்கிக்கிறாங்க. அங்கே இருக்கிற ஊடக நண்பர்களின் வழிகாட்டுதல்களோடு தான் அந்த கிராமத்துக்குப் போனோம். இதே மாதிரி எங்கெல்லாம் உதவிபோய் சேரலையோ அங்கெல்லாம் உள்ள நண்பர்கள் வெளியில் சொன்னாங்கன்னா இந்த மாதிரி உதவியே கிடைக்காம இருக்கிற மக்களுக்கு உதவ முடியும். 

தார்ப்பாய் ஏராளம் தேவைப்படுது. ஏதாச்சும் பழைய பிளக்ஸ் பேனர் கிடைச்சாக்கூட அதை எடுத்துட்டுப்போகலாம். தொடர்ந்து உணவுப் பொருள்களாகக் கொடுக்காமல், அரிவாள், கத்தி, ரம்பம், கயிறு போன்ற பொருள்களையும் கொடுத்தா அவங்களுக்கு உதவியா இருக்கும். குடிசை மேல விழுந்து கிடக்கிற மரத்தைக் கட்டித் தூக்கணும்னா, அதுக்கு கயிறுகள் தேவை. உணவு மட்டுமே எத்தனை நாள் கொடுத்திட்டு இருக்க முடியும்? அரசாங்கம் இப்போதைக்குள்ள அந்தக் குடிசைகளை எல்லாம் சரி செய்து கொடுக்க ரொம்ப நாள் ஆகும். அவங்களே அவங்களுடைய வீட்டைச் சரிசெய்ய முயற்சி செய்ய நாம பொருள்கள் கொடுக்கலாம்.

பல இடங்களில் சாலை மறியல் நடக்குது. அந்தச் சாலை மறியல் நடக்குற இடத்துல உள்ள மக்கள் மற்றவங்களை உள்ளே விடலைன்னாலும், உதவிசெய்ய வருகிற தன்னார்வலர்களையாச்சும் அனுமதிக்கலாம். அதே மாதிரி உதவிப் பொருள்கள் கிடைச்சவங்களே மறுபடி பொருள்களை வாங்கிக்காம மற்றவங்களுக்கும் கொடுக்க உதவுவது அவசியம். ஊரைச் சுற்றியுள்ள பகுதியைச் சார்ந்தவங்கன்னா பிரச்னையில்லை.. எப்படியாச்சும் சமாளிச்சிடலாம். ஆனா, வெளியூரிலிருந்து வர்றவங்களை உள்ளே விடலைன்னா, அவங்க அவ்வளவு தூரத்திலிருந்து உதவ வந்தும் பயனில்லாமல் போயிடும். அதனால, மற்றவர்களும் உதவ முன்வர தயங்க வாய்ப்பிருக்கு.

உதவி

இளைஞர்கள் இன்னும் அதிகமானவர்கள் களத்தில் இறங்கினா உதவியா இருக்கும். நேத்து, ஒரு வயசான தாத்தா, குடிசை மேல விழுந்துகிடக்கும் மரத்தை வெட்டிட்டு இருந்தாரு. அவருடைய முதுமையினால் அவர், அதைச் செய்ய பல மணி நேரம் ஆகிடும். அதுமாதிரி இடங்களில் இளைஞர்கள் இருந்தால், உதவியாக இருக்கும். இந்த இடங்கள்ல நிறைய குழந்தைங்க இருக்காங்க. அந்தப் பகுதி முழுக்க சேறும், சகதியுமா இருக்கு. இரவு பத்து மணிக்கு மேல குளிர் அதிகமா இருக்கு. சட்டை கூட இல்லாம நிறைய குழந்தைங்க நின்னுட்டு இருக்காங்க. பார்க்கவே கஷ்டமா இருக்கு. குழந்தைங்களுக்குப் போர்வை கிடைச்சா பெரிய உதவியா இருக்கும்.

அரசாங்கம் முகாமைக் காலி பண்ணிட்டாங்கன்னா அவங்களுக்குக் கிடைக்கிற ஒருவேளை சாப்பாடுகூட கிடைக்காம போக வாய்ப்பிருக்கு. அதே மாதிரி பள்ளிகளைத் திறந்தால் நிலைமை மோசமாயிடும். ஏன்னா, பலர் ஸ்கூல்லதான் தங்கி இருக்காங்க. அவங்களை எல்லாம் அப்புறப்படுத்தினா, நிச்சயம் அந்தப் பள்ளிக்கு பசங்க வர்றது கேள்விக்குறிதான். அடிப்படைத் தேவையே இல்லாமல் நிற்கதியா நிற்கும்போது பெத்தவங்க பசங்களை எப்படிப் பள்ளிக்கு அனுப்புவாங்க.? அந்தந்தப் பகுதி தலைமை ஆசிரியர்கள்கிட்ட பேசி அரசாங்கம்தான் இதுக்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுக்கணும்.

உதவி வேணும்னு போஸ்ட் போடுறவங்க இரண்டு அல்லது மூன்று பேருடைய எண்களையும், தேதியையும், இடத்தையும் குறிப்பிட்டு போஸ்ட் பண்ணா நல்லா இருக்கும். ஏன்னா, அந்தப் பகுதிக்கு உதவிகள் கிடைச்சதுக்கு அப்புறமும் தேதி போடாம இருக்கிறதுனால மறுபடி, மறுபடி உதவி தேவைன்னு ஷேர் ஆகும்போது உதவி கிடைச்சவங்களுக்கே மறுபடி உதவுற மாதிரி ஆகிடும். உதவி பண்ணப் போறவங்க அந்த ஊர்ல ஊர்த்தலைவர் அல்லது முகாமை நடத்துறவங்களுடைய எண்களை வாங்கிட்டா, அவங்களுக்கு என்ன தேவைங்குறதைக் கேட்டுத்தெரிஞ்சிக்கலாம்.

உதவி

அதே மாதிரி உதவி பண்றவங்களில் அவங்களுடைய ஸ்மார்ட் கார்டை வாங்கிட்டு என்ட்ரி போட்டு பொருள்களைக் கொடுக்கிறாங்க. எக்ஸ்ட்ரா வாங்கிடுவாங்க எல்லோருக்கும் பொருள் போய் சேரணும்னு நினைக்கிறது சரிதான்.. ஆனா, அதுக்காக அவங்களை அசிங்கப்படுத்தக்கூடாது. ஏற்கெனவே நொந்துபோய் இருக்கிறவங்களை இது இன்னும் அதிகமா காயப்படுத்தும். நாப்கின் வாங்கிட்டுப் போறவங்க அதைத் தனியா ஒரு பையில் போட்டுட்டு, இந்த இடத்துல இருக்கு வேணுங்குறவங்க எடுத்துக்கோங்கன்னு சொல்லிட்டாப் போதும். எல்லோருக்கும் தேவைப்படாது என்பதால எல்லா பைகளிலும் போட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இன்னர்ஸும் வாங்கிக் கொடுத்தா அவங்களுக்கு இன்னும் உதவியா இருக்கும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்