வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (22/11/2018)

கடைசி தொடர்பு:19:30 (22/11/2018)

`திருப்பிக் கொடுக்கணும்ல...’ - டெல்டாவுக்கு உதவிக்கரம் நீட்டும் கேரள அதிகாரிகள்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, கேரள அரசு அதிகாரிகள் நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.

நிவாரணப் பொருள்கள்

கஜா புயலின் கோரத் தாண்டவத்தால், டெல்டா மாவட்டங்கள் நிலைகுலைந்து கிடக்கின்றன. நாட்டுக்கே உணவளித்த விவசாயி, வாகனங்களில் வரும் நிவாரணப் பொருள்களை நோக்கிக் காத்திருக்கின்றனர். குறிப்பாக, டெல்டா பகுதிக்கு, நாடு முழுவதும் இருந்து உதவிக் கரம் நீண்டு வருகிறது. அதிலும் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் நிவாரணப் பொருள்கள் தொடர்ந்து வந்து வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலிருந்து நிவாரணப் பொருள்கள் இன்று தமிழகத்துக்கு அனுப்பப்பட்டன. இதுதொடர்பாக வயநாடு சப் கலெக்டர் உமேஷ் கேசவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ``தட் திருப்பிக் கொடுக்கணும்ல மொமன்ட் ஃப்ரம் கேரளா... தமிழகத்துக்காக, வயநாட்டிலிருந்து நிவாரணப் பொருள்கள் கொண்ட முதல் ட்ரக்கை நமது கலெக்டர் அஜய்குமார் கொடியசைத்து வைத்தார்” என்று கூறியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த உமேஷ் கேசவன், வயநாடு சப் கலெக்டராக உள்ளார். குறிப்பாக, கேரள வெள்ளம் காலகட்டத்தில் களத்தில் இறங்கி வேலை பார்த்தவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.