வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (22/11/2018)

கடைசி தொடர்பு:21:00 (22/11/2018)

நாட்டின் 12 துறைமுகங்கள் சார்பாக ரூ.3.50 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள்! #CycloneGaja

இந்தியாவில் உள்ள 12 பெருந் துறைமுகங்கள் சார்பாக ’கஜா புயல்’ பாதிக்கப்பட்ட திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ரூ.3.50 கோடி மதிப்பிலான புயல் நிவாரணப் பொருள்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

கஜா புயல் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது. இதனால், வீடுகள், கால்நடைகளை இழந்து மக்கள் உணவு, தண்ணீருக்காக தவித்து வருகின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், சமூக, சமுதாய அமைப்புகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பி வருகின்றனர்.

அந்த வகையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், கொச்சி துறைமுகம், நியூமங்களூர் துறைமுகம், சென்னை காமராஜர் துறைமுகம், கோவா துறைமுகம், ஜவஹர்லால்நேரு துறைமுகம், மும்பை துறைமுகம், பாரதீப் துறைமுகம், விசாகப்பட்டினம் துறைமுகம், தீனதயாள் துறைமுகம், கொல்கத்தா மற்றும் கால்தீயா துறைமுகம் உள்ளிட்ட 12 பெருந்துறைமுகங்கள் சார்பில் புயல் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

30,000 எண்ணிக்கையிலான படுக்கை விரிப்புகள், துண்டு, அரிசி, பருப்பு, பிஸ்கட் பாக்கெட், பால் பவுடர், பாய், மெழுகுவத்தி, கொசுவத்தி, கொசுவலை, தீப்பெட்டி மற்றும் தண்ணீர் பாட்டில்கள் ஆகிய நிவாரணப் பொருள்கள் புயல் பாதிக்கப்பட்டுள்ள  திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு முதல்கட்டமாக 2 கண்டெய்னர் லாரிகளில்  அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.3 கோடியே 50 லட்சம் என துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க