வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (22/11/2018)

கடைசி தொடர்பு:21:20 (22/11/2018)

`வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதியில்லை!’ - வனத்துறை

கோவை வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வனத்துறை தெரிவித்துள்ளது.

வெள்ளியங்கிரி

கோவை வெள்ளியங்கிரி மலையில், வனத்துறை அனுமதியை மீறி, கடந்த சில ஆண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, இந்து மக்கள் கட்சி மாநிலச் செய்தித் தொடர்பாளர், செந்தில் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார்.

அதில், வெள்ளியங்கிரி மலை, கடல் பரப்பிலிருந்து 6,000 அடி உயரத்தில் உள்ளது. இங்கு கார்த்திகை நாளில் 1,000 லிட்டர் நெய் கொண்டு செல்லப்பட்டு, கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக தொண்டாமுத்தூர் தொகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் பலர் கட்டாய பணம் வசூல் செய்கின்றனர். மேலும், தங்கள் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி வனப்பகுதிக்குச் செல்ல பலரை அனுமதிக்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் வனப்பகுதியில் தங்குவதால் காடுகள் அழிக்கப்படுவதோடு, வனவிலங்குகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான வெள்ளியங்கிரியில், குரங்கணி தீ விபத்து போன்ற விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. கார்த்திகை தீப நிகழ்ச்சி நேரத்தில், வெள்ளியங்கிரி வனப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டால் அதைத் தடுப்பதற்காக ஏற்பாடுகள் கூட இல்லாத நிலை உள்ளது. எனவே, வெள்ளியங்கிரி மலைப்பகுதிக்கு மக்கள் வருவதை அனுமதிக்கக் கூடாது. மேலும் வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடக்கும் கார்த்திகை தீப நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை தரப்பில், `வெள்ளியங்கிரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், அங்குள்ள சுயம்பு ஆண்டவர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி இல்லை. கோயிலில் வழிபாடு நடத்த மட்டும் மக்கள் அனுமதிப்படுகின்றனர்' என்று தெரிவித்தனர். `பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் எப்படி, கடந்த சில ஆண்டுகளாகத் தீபம் ஏற்றுகின்றனர், மக்களை எதற்காக அனுமதி அனுமதித்தீர்கள்?' என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.