வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (22/11/2018)

கடைசி தொடர்பு:22:00 (22/11/2018)

காஞ்சிபுரம் ரவுடி தியாகுவின் அம்மா மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது!

காஞ்சிபுரம் ரவுடி தியாகு என்பவர் ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்து வருகிறார். தற்போது சிறையில் இருக்கும் அவர் அம்மா பவானி மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

தியாகு, காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதர் தற்கொலைக்குப் பிறகு காஞ்சிபுரம் பகுதியைக் கோலோச்சி வந்தவர்களில் ‘பொய்யாகுளம்’ தியாகு முக்கியமானவர். பட்டு ஜவுளி வியாபாரிகள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என எல்லோரையும் போனில் பணம் கேட்டு மிரட்டிவந்தார். பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் தொழிலதிபர்களிடம் பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்தார். தியாகுவுக்குப் பயந்து சிலர் தலைமறைவானார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் பணம் கொடுக்காத ஜவுளிக்கடை அதிபர் ஒருவரின் கடையில் வேலைசெய்பவர்களை, ஆட்களை அனுப்பி அரிவாளால் வெட்ட, காஞ்சிபுரமே பதறிப்போனது. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தியாகுவைத் தேடிவந்தார்கள். காவல்துறையினர் தன்னை என்கவுன்ட்டர் செய்யக்கூடும் என்று அஞ்சிய தியாகு கடந்த ஏப்ரல் மாதத்தில் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் வெளியில் வரமுடியாத அளவுக்கு அவர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பவானி, தியாகு

ஆனாலும் காஞ்சிபுரத்தில் குற்றங்கள் குறைவதாக இல்லை. சிறையில் இருந்துகொண்டே காஞ்சிபுரம் பகுதியில் உள்ளவர்களை மிரட்டத் தொடங்கினார். அதற்கு உடந்தையாக அவரது அம்மா பவானி, தியாகு சொல்லும் இடங்களுக்குச் சென்று அவர்களை மிரட்டி பணம் வாங்கி வருவார். பவானி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில், பவானியின் மிரட்டலால் காஞ்சிபுரம் பகுதியில் ஒருவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பவானி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க